செத்து போன அதிமுகவுக்கு எதுக்கு உயிர் கொடுக்கனும்.. பாஜக கூட்டணிக்கு போனா சிறுபான்மையர், இளைஞர் ஓட்டு கையை மீறி போய்விடும்.. தனித்தே நிற்போம்.. 2ஆம் இடம் நிச்சயம் உண்டு.. அதிமுகவை 3வது இடத்திற்கு தள்ளிட்டா, அடுத்த தேர்தல் முதல் திமுக vs தவெக என மாறிவிடும்.. எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிட்டால் கூட பாதுகாப்பு தான்.. என்.டி.ஏ கூட்டணிக்கு போனா, விஜய் ஜென்மத்திற்கும் முதல்வர் ஆக முடியாது.. ஜான் ஆரோக்கியசாமி ஆவேச கருத்துக்கள்..! 

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எடுக்கப்போகும் தேர்தல் வியூகம் குறித்து நாள்தோறும் புதிய தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, மார்ச் 6-ம் தேதி பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில்…

vijay john

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எடுக்கப்போகும் தேர்தல் வியூகம் குறித்து நாள்தோறும் புதிய தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, மார்ச் 6-ம் தேதி பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் விஜய் நடத்திய ரகசிய ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் எதிர்கால பாதையை தீர்மானிக்கும் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், கட்சியின் உள்வட்டார ஆலோசகர்கள் தெரிவிக்கும் கருத்துகள் விஜய்யை ஆழ்ந்த யோசனையில் ஆழ்த்தியுள்ளன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி முன்வைத்த வாதங்கள் மிகவும் அதிரடியாக இருந்ததாக தெரிகிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது என்பது அரசியல் ரீதியாக தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று அவர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் தற்போது தி.மு.க-விற்கு மாற்றாக ஒரு சக்தியை மக்கள் எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும், அந்த இடத்தை நோக்கி த.வெ.க நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பா.ஜ.க-வுடன் கைகோர்த்தால், தற்போது விஜய்யை நோக்கி வரும் சிறுபான்மையினர், இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக இழக்க நேரிடும் என்பதே அவரது பிரதான அச்சமாக உள்ளது.

கூட்டணி குறித்துப் பேசும்போது அ.தி.மு.கவைப் பற்றி ஜான் ஆரோக்கியசாமி குறிப்பிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. “அழியப்போகும் ஒரு கட்சிக்கு நாம் ஏன் உயிர் கொடுக்க வேண்டும்?” என்ற கேள்வியை அவர் விஜய்யிடம் முன்வைத்துள்ளார். வரும் தேர்தலில் அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும், அந்த பலவீனமான நிலையில்தான் அவர்கள் த.வெ.க-வின் ஆதரவை நாடி வருவதாகவும் அவர் வாதிட்டுள்ளார். அ.தி.மு.க என்ற கட்சி தமிழக அரசியலில் இருந்து மறையும்போதுதான், அந்த இடத்தை பிடித்து தி.மு.க-விற்கு எதிரான வலுவான அரசியலை த.வெ.க-வால் முன்னெடுக்க முடியும் என்பது அவரது கணிப்பாக உள்ளது.

விஜய்யை தமிழகத்தின் முதலமைச்சராகப் பார்ப்பதே தங்களின் ஒரே இலக்கு என்றும், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பது கட்சியின் நோக்கம் அல்ல என்றும் ஜான் ஆரோக்கியசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் விஜய் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என்பதையும் அவர் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார். மேலும், த.வெ.க மீது அதீத அன்பு வைத்துள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகளை தனித்து போட்டியிடுவதன் மூலம் அறுவடை செய்ய முடியும் என்றும், கூட்டணி வைத்தால் அந்த வாக்குகள் சிதறிவிடும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

தேர்தலில் ஒருவேளை எதிர்பார்த்த இடங்களை பிடிக்க முடியாவிட்டாலும், தனித்து போட்டியிட்டு 20 சதவீத வாக்குகளை பெற்றால் அதுவே கட்சியின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும். அவ்வளவு பெரிய வாக்குவங்கியை வைத்துள்ள ஒரு கட்சியை யாராலும் எளிதில் அசைக்க முடியாது என்பதால், தனித்து போட்டியிடுவதே விஜய்யின் தனிப்பட்ட பிம்பத்திற்கும் கட்சியின் எதிர்காலத்திற்கும் நல்லது என்று ஜான் ஆரோக்கியசாமி வலியுறுத்தியுள்ளார். இந்த பேச்சைக் கேட்ட பிறகு அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் மாற்றுக்கருத்து சொல்ல முடியாமல் அமைதி காத்துள்ளனர். ஜானின் வாதங்களை மிக உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்த விஜய், நீண்ட நேரம் மௌனமாகவே இருந்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்றாலும், விஜய்யின் மௌனம் பல அர்த்தங்களை சொல்வதாக நிர்வாகிகள் கருதுகின்றனர். ஒருபுறம் டெல்லியின் அழுத்தம், மறுபுறம் ஆலோசகர்களின் எச்சரிக்கை என விஜய் ஒரு இக்கட்டான குறுக்குச்சாலையில் நிற்கிறார். ஜான் ஆரோக்கியசாமியின் ‘தனித்துப் போட்டி’ என்ற வியூகத்தை விஜய் ஏற்பாரா அல்லது நடைமுறை அரசியலை கருதி கூட்டணிப் பக்கம் சாயவாரா என்பதுதான் தற்போதைய மர்மம். எது எப்படியோ, விஜய்யின் இந்த மௌனம் தமிழக அரசியலில் ஒரு பெரிய புயலுக்கு முன்னதான அமைதியாகவே பார்க்கப்படுகிறது.