தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விக்கிரவாண்டி வி.சாலையில் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒட்டுமொத்த இந்தியாவும் கவனித்தது. மேலும் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கிலும் இருந்து. மாநாட்டில் விஜய்க்கு அடுத்தபடியாக கவனிக்க வைத்தவர் தொகுப்பாளினி கவிபாரதி துர்கா.
விஜய் மேடையில் என்ட்ரி ஆகத் துவங்கியதிலிருந்து மாநாடு முடியும் வரை ஒவ்வொரு நிகழ்வுகளையும் வர்ணணை செய்தார். இதுதான் இவருக்கான முதல் மிகப்பெரிய மேடை ஆகும். எனினும் எந்த பரபரப்புமின்றி அமைதியாக ஒவ்வொன்றாகத் தொகுத்து வழங்கினார். மாநாட்டு முடிவில் தவெக தலைவர் விஜய்யும் இவரை பாராட்டினார்.
இந்நிலையில் கவிபாரதி துர்காவின் குரலையும், தொகுத்து வழங்கிய விதத்தையும் சமூக வலைதளங்களில் டிரோல் செய்ய ஆரம்பித்தனர். மேலும் பலர் விமர்சனம் செய்தனர். உச்சகட்டமாக சிலர் வெளிப்படையாகவே அவர் தொகுத்து வழங்கிய விதத்தினை விமர்சனம் செய்தனர்.
விக்கிரவாண்டியில் வியூகம் வித்திட்ட விஜய்.. லட்சம் தொண்டர்களுக்கு மத்தியில் அனல் பறக்கும் பேச்சு..
ஆனால் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத கவிதுர்கா அடுத்தடுத்து கவனம் ஈர்க்க ஆரம்பித்துள்ளார். இதுவரை பொதுமேடைகளிலும், சோஷியல் மீடியாக்களிலும் தலைகாட்டாத கவிதுர்கா கடந்த இரு நாட்களாக அதிகமாகப் பகிரப்படுகிறார். குறிப்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான்தான் உங்கள் கவிதுர்கா.. தவெக மாநாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பெரிய மேடையில் எனக்கு தொகுத்து வழங்க வாய்ப்பினைக் கொடுத்த தவெக தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்களின் ஆதரவிற்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து ஆதரவு கொடுக்க கேட்டுக்கொள்கிறேன்.“ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
பெயரிலேயே பாரதியின் பெயரைக் கொண்டிருப்பதால் என்னவோ கவிதை எழுதுவதில் நிறைய ஆர்வம் கொண்டவராக விளங்கும் கவிபாரதி துர்கா தனது பெயரிலேயே யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.