தவெக – காங்கிரஸ் கூட்டணி உறுதியா? தவெக 150, காங்கிரஸ் 50.. விசிக வந்தால் 34. திமுக கூட்டணிக்கு போகும் பாமக, தேமுதிக, அமமுக? ஆள் கிடைக்காமல் தவிக்கும் அதிமுக.. மும்முனை போட்டியால் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பா? 2026ல் என்ன நடக்கும்?

தமிழக அரசியலில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் நுழைந்திருப்பது, இதுநாள் வரை ஆதிக்கம் செலுத்தி…

vijay rahul

தமிழக அரசியலில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் நுழைந்திருப்பது, இதுநாள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிட கட்சிகளின் கூட்டணி கணக்குகளை அடியோடு மாற்றியமைத்துள்ளது. தற்போது உருவாகிவரும் சூழல், வலுவான மும்முனை போட்டிக்கும், அதன் விளைவாக ஒரு தொங்கு சட்டமன்றம் அமைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், தேசிய கட்சியான காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. த.வெ.க. குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விஜய்யின் தலைமைக்கு முழுமையான அங்கீகாரத்தை பெறும் நோக்கம் கொண்டது.

த.வெ.க. கூட்டணியில் இணையும், காங்கிரஸூக்குக் 50 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், மாநிலத்தில் வலுவான ஒரு திராவிடரல்லாத தலைமையிலான கூட்டணி உருவாகிறது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு துணை முதல்வர் பதவி, ஐந்து அமைச்சர்கள் பதவியும் வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த அணியில் இணைந்தால், அக்கட்சிக்கு 34 ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இக்கட்சிக்கு துணை முதல்வர் பதவியும் அமைச்சர் பதவியும் வழங்க வாக்குறுதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

கடந்த தேர்தல்களில் வெற்றி கூட்டணியை அமைத்த தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு, இந்த முறை சவால்கள் அதிகமாக உள்ளன. த.வெ.க. காங்கிரஸ் கட்சியுடன் ஒரு வலிமையான கூட்டணி அமைக்கும் பட்சத்தில், தற்போது அ.தி.மு.க. மற்றும் திமுக, மற்ற அரசியல் கட்சிகளை கூட்டணிக்குள் சேர்க்க முயற்சிக்கும். உதாரணமாக வன்னியர் வாக்குகளை தீர்மானிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, பிரேமல்தா விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. மற்றும் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

த.வெ.க. பிரிக்கும் வாக்குகளைச் சமாளிக்க, தி.மு.க. மேலும் சில கட்சிகளை உள்ளடக்கி ஒரு ‘மெகா கூட்டணி’யை உருவாக்கி, வாக்குகளை சிதறவிடாமல் தடுக்க முயற்சிக்கும். ஆனால் அதே நேரத்தில் அ.தி.மு.க., கூட்டணி வலுவான கட்சிகள் இன்றி சிரமப்படுகிறது. பா.ஜ.க.வுடனான கூட்டணி மட்டுமே இக்கட்சிக்கு உள்ளது.

தி.மு.க. ஒரு பக்கமும், த.வெ.க. மறுபக்கமும் வலுவான கூட்டணியை அமைக்கும் பட்சத்தில், அ.தி.மு.க. தலைமையிலான அணிக்கு போதிய பலம் இருக்காது. இது அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கியை மேலும் சிதறடிக்கும் அபாயம் உள்ளது.

தமிழகத்தின் அரசியல் களம் மூன்று மையங்களை சுற்றிச் சுழலும் ஒரு மும்முனை போட்டியாக மாற அதிக வாய்ப்பு உள்ளது:

தி.மு.க. கூட்டணி

த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி

அ.தி.மு.க. தலைமையிலான அணி

இந்த மும்முனை போட்டி, தமிழகத்தில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையான ஆட்சி அமைக்கும் போக்கை கேள்விக்குள்ளாக்கும். மூன்று அணிகளும் கடுமையாக போட்டியிடுவதால், ஒட்டுமொத்த வாக்குகளும் சிதறுண்டு, எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் 118 இடங்கள் கிடைப்பது சவாலாக அமையும்.

இதனால், 2026 தேர்தலில் எந்த கூட்டணிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காமல், தமிழகத்தில் ஒரு தொங்கு சட்டமன்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தேர்தலுக்கு பின்னால், த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு அ.தி.மு.க. வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல், தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும். த.வெ.க.வின் எழுச்சி, திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை வலுவாக சவால் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.