நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். ஆனால் துவக்கம் முதலே அவரின் அரசியல் செயல்பாடுகள் அரசியல் விமர்சர்களாலும், திமுகவினராலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. ஏனெனில் அவர் முழுநேர அரசியல்வாதியாக செயல்படாமல் பகுதி நேர அரசியல்வாதியாக மட்டுமே செயல்பட்டு வந்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் அவர்களை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து பேசினார். இதை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள்.
தவெக சார்பில் விழுப்புரம், மதுரை ஆகிய இரண்டு இடங்களில் மாநாடு நடந்தது. இந்த மாநாடுகளில் 10 லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர். விஜய்க்கு கூடிய கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விஜய்க்கு மக்கள் ஆதரவு இருப்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
இதையடுத்து திமுக ஆதரவாளர்களும், திமுகவினரும் முன்பை விட விஜயை அதிகமாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்ய துவங்கினர். ஆனால் விஜய் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று மக்களை சந்திக்கும் வேலையை தொடங்கினார். திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அது வெற்றிகரமாக நடந்தாலும் கரூருக்கு அவர் சென்றிருந்தபோது நடந்த சம்பவம் விஜயின் அரசியல் நடவடிக்கைகளை முடக்கி போட்டது.
அது நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விஜய் இன்னும் வெளியே வரவில்லை. அதோடு மக்கள் சந்திப்பையும் அவர் தள்ளி வைத்துவிட்டார்.
கரூர் சம்பவத்தால் தவெக கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. கட்சி நிர்வாகிகள் அனுபவம் இல்லாதவர்கள், சரியாக திட்டமிடவில்லை, விஜய்க்கு தலைமை பண்பு இல்லை என்றெல்லாம் பலரும் விமர்சனம் செய்ய தற்போது கட்சியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்திருக்கிறாராம் கட்சித் தலைவர் விஜய்.
வீடியோ கால் மூலம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறாராம். மேலும், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து புஸி ஆனந்தை தூக்கிவிட்டு அந்த பதவியில் ஆதவன் அர்ஜுனாவை உட்கார வைக்கும் திட்டமும் இருக்கிறதாம். அதேநேரம் புஸி ஆனத்துக்கு புதுச்சேரி மாவட்ட தலைவர் பதவி கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.
அதோடு செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்றி விட்டு அதற்கு பதில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் விஜய் முடிவெடுத்திருக்கிறாராம்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருப்பதால் கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுருக்கிறார் விஜய். எனவே கட்சியில் அதிரடி மாற்றங்கள் நடப்பதோடு, பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.
