நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் மக்கள் சந்திப்பு பயணம், தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இன்று கரூர் மற்றும் நாமக்கல்லில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள விஜய்யை பார்க்க அதிகாலை 2 மணிக்கே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பணம் கொடுத்து திரட்டப்பட்ட கூட்டம் அல்லாமல், தானாகவே வந்த இந்த மக்களின் கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளன.
சேலம் மாவட்டம், எடப்பாடியிலிருந்து விஜய்யின் பேரணிக்காக வந்திருந்த ஒரு தொண்டர் “காலையில் 2 மணிக்கே நாங்கள் வந்துவிட்டோம். 2026 தேர்தலில் அண்ணன் முதல்வர் ஆவார். அதற்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கவே இங்கு வந்துள்ளோம்” என்றார்.
நாமக்கல்லில் இருந்து வந்திருந்த மற்றொரு ரசிகர், “நாங்கள் அதிகாலை 4 மணிக்கே இங்கு வந்துவிட்டோம். நேற்றிரவு இங்கேயே படுத்து உறங்கினோம். எங்களுக்கு சாப்பாடே தேவையில்லை, விஜய்யை பார்த்தால் போதும்” என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார். மேலும், “சின்ன வயதிலிருந்து அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற கனவு இன்று நனவாகிறது. அவர் பேசுவதை கூட கேட்கத் தேவையில்லை; அவரை பார்த்தாலே போதும்” என்றார்.
பல்வேறு ரசிகர்களிடம் பேசியபோது, அவர்களது எதிர்பார்ப்புகள் ஆழமான அரசியல் மாற்றத்தை நோக்கியதாக இருந்தன. 70 ஆண்டுகளாக ஏதோ ஆட்சி நடக்கிறது. எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. ஆனால், அண்ணன் அரசியலுக்கு வந்த பிறகு, மக்களுக்கு ஒரு நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். ஒரு நல்ல ஆட்சி, உண்மையான மக்களாட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் ஆசை” என்றார் ஒரு ரசிகர்.
“திரையில் தளபதியாகப் பார்த்தோம், இப்போது தலைவராக பார்க்கிறோம். நிச்சயம் 2026-ல் அவரை முதல்வராக பார்ப்போம். இனி வரும் காலம் நல்லதாகத்தான் இருக்கும். தமிழக மக்கள் பெரும்பாலானோர் தளபதியை தேர்வு செய்துவிட்டனர்” என்று மற்றுமொரு ரசிகர் நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து, மற்ற அரசியல் கட்சியினர் ஆயிரம் பேசுவார்கள். ஆனால் அதெல்லாம் எங்களுக்கு எடுபடாது. தளபதி வந்தால், நல்ல மாற்றம், நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்பதுதான் எங்கள் கருத்து” என்றும் கூறினார்.
விஜய்யின் கூட்டத்திற்கு வந்திருந்த ரசிகர்கள், அவரது அறிவுரைகளையும் பின்பற்றினர். “வீட்டில் பிள்ளைகள் இருந்தும், அவர்களை கூட்டத்திற்கு அழைத்து வரவில்லை. எங்கள் அண்ணன், குழந்தைகள் வர வேண்டாம் என்று உத்தரவிட்டிருந்தார். அவரது வார்த்தையை மீற முடியாது என்பதால், அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வந்தோம்” என்று ஒரு ரசிகர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மொத்தத்தில், விஜய்யின் மக்கள் சந்திப்பு, ஒரு நடிகருக்கான ஆதரவை தாண்டி, ஒரு அரசியல் தலைவருக்கான எதிர்பார்ப்பை மக்களின் மனதில் விதைத்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
