மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, ‘திராவிட வெற்றி கழகம்’ (DVK) என்ற கட்சியை தொடங்கிய நிலையில் இக்கட்சி, விஜய்யின் TVK கட்சியின் பெயரை ஒட்டி இருப்பதாகவும், இது தற்செயலாக நடந்தது இல்லை, திட்டமிட்டு, விஜய்யின் கட்சி பெயரை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் உள்ள ஒரு பெரிய கட்சியின் தூண்டுதலால் ஆரம்பிக்கப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட விஜய்யின் கட்சி உச்சரிப்புடன் கூடிய ‘திராவிட வெற்றி கழகம்’ (DVK) என்ற பெயருடன் ஒரு கட்சிப் பதிவு செய்திருப்பதன் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தூண்டுதல் இருக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. குறிப்பாக, TVK-வின் வாக்கு வங்கியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் அரசியல் நோக்கத்தை குலைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
இந்த DVK அமைப்பின் அடிப்படை நோக்கம், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, குறைந்தபட்சம் 1% முதல் 2% வாக்குகளை திசை திருப்புவது அல்லது குழப்பி மாறி வாக்களிக்க செய்வதுதான் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த DVK அமைப்பானது, வெறும் பெயர் குழப்பத்துடன் நிற்காமல், வரவிருக்கும் தேர்தல்களில் நடைமுறையில் குழப்பத்தை உண்டாக்க ஒரு திட்டத்தை வகுக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அதாவது தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரிலேயே அல்லது அதே உச்சரிப்பை கொண்ட வேட்பாளர்களை DVK-வும் நிறுத்த வாய்ப்புள்ளது. உதாரணமாக, TVK-வின் வேட்பாளர் ‘S. செழியன்’ என்றால், DVK-வின் வேட்பாளர் ‘சே. செழியன்’ ஆக இருக்கலாம்.
ஒரே மாதிரியான கட்சியின் பெயர்களும், ஒரே மாதிரியான வேட்பாளர்கள் பெயர்களும் வாக்களிக்கும் இயந்திரத்தில் அருகில் இருந்தால், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள அல்லது அரசியல் விழிப்புணர்வு குறைவான வாக்காளர்கள் குழப்பமடைய வாய்ப்புள்ளது. இதனால், TVK-க்கு செல்ல வேண்டிய வாக்குகள் DVK-க்கு சென்று, இறுதியில் இந்த திட்டம் வெற்றி பெறக்கூடும்.
வாக்காளர்கள் மத்தியில் எழும் இந்த செயற்கையான குழப்பத்தை தவிர்க்கவும், தங்கள் கட்சியின் அடித்தளத்தை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அரசியல் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்:
DVK என்ற பெயரை தேர்தல் ஆணையம் பதிவு செய்யாமல் இருக்க உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சரிப்பு மற்றும் பொருள் ஒற்றுமை காரணமாக வாக்காளர்கள் குழப்பமடைவார்கள் என்று வாதிட வேண்டும்.
‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற பெயருக்கு அவர்கள் பெறவிருக்கும் சின்னம், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தால், அதையும் எதிர்த்துப் போராட வேண்டும்.
ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் நேரடி பிரச்சாரங்கள் மூலம் தங்கள் கட்சியின் பெயர், தலைவர் மற்றும் கட்சியின் சின்னம் ஆகியவற்றை தெளிவாகவும், திரும்ப திரும்ப மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
தங்கள் கட்சியை பெயரின் சுருக்கமான TVK என்றே மக்கள் மத்தியில் நிலைநிறுத்தி, DVK என்பது வேறு கட்சி என்று அழுத்தமாக பிரசாரம் செய்ய வேண்டும். தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், தங்கள் வேட்பாளர் பெயரை தாண்டி, சின்னத்தை பதிவு செய்தல், தலைவர் படத்தை ஒட்டுதல் போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் கவனமாக பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று மக்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் அரசியல் களத்தில் புதியதாக அடியெடுத்து வைக்கும் தமிழக வெற்றி கழகத்தை (TVK) ஆரம்பத்திலேயே முடக்க அல்லது பலவீனப்படுத்த மேற்கொள்ளப்படும் உத்தி இது என்று பலரும் கருதுகின்றனர். இந்த சவாலை நடிகர் விஜய் தலைமையிலான கட்சி எப்படி சமாளிக்க போகிறது என்பதில்தான் அதன் அரசியல் எதிர்காலம் அடங்கியுள்ளது..
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
