அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, “நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்கு முன்பு இருந்த மரியாதை மீண்டும் கிடைக்கும்” என்று உறுதியளித்தார். “அமெரிக்கா இதற்கு முன் இல்லாத அளவுக்கு மரியாதை பெறும்,” “நாம் வெற்றி பெற்றால், அமெரிக்கா மதிக்கப்படும்” போன்ற அவரது வசனங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் உலக நாடுகள் அமெரிக்காவை மதிக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
டிரம்பின் ஆட்சியில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டது. இதற்கு பதிலடியாக, சீன சமூக வலைதளங்களில் ட்ரம்பை கிண்டல் செய்யும் வகையில் பல செயற்கை நுண்ணறிவு காணொளிகள் வைரலாக பரவின. அவற்றில் ட்ரம்ப், எலான் மஸ்க், மற்றும் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் நைக் ஷூக்களை தயாரிப்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. இத்தகைய நகைச்சுவை படங்கள், சீனர்கள் அமெரிக்க வர்த்தக போரைக் குறித்து எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளால் அதிருப்தி அடைந்துள்ளன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், அமெரிக்காவின் வர்த்தகக்கட்டுப்பாடுகளை “கொடூரமானவை” மற்றும் “அடிப்படையற்றவை” என்று விமர்சித்துள்ளார். மேலும், டிரம்ப் அதிபராக இருக்கும் வரை அமெரிக்காவிற்கு பயணம் செய்யமாட்டோம் என்றும் பலர் தெரிவித்தனர்.
இத்தாலியை சேர்ந்த ஒரு நபர், எலான் மஸ்க் ஒரு “ஜங்கி”, “பைத்தியக்காரன்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஐரோப்பாவில் நிலவும் பொதுவான மனநிலையைக் காட்டுகிறது.
நட்பான நாடாக கருதப்படும் கனடாவும் அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளால் அதிருப்தியில் உள்ளது. அமெரிக்காவின் வர்த்தக வரிகளுக்கு பதிலடியாக, கனடா மக்கள் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் “கனேடிய பொருட்களை வாங்குங்கள், அமெரிக்காவை புறக்கணியுங்கள்” என்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. “பை-பை அமெரிக்கா, நாங்கள் கனடிய பொருட்களை வாங்குவோம்” என கனடிய ஊடகங்களும் பகிரங்கமாக விமர்சிக்கின்றன.
மொத்தத்தில் டிரம்ப் “அமெரிக்காவுக்கு மரியாதை கிடைக்கும்” என்று உறுதியளித்தார். ஆனால், அவரது கொள்கைகள் உலக நாடுகளிடையே கோபத்தையும், கிண்டல்களையும், வர்த்தக போர்களையும் ஏற்படுத்தியுள்ளன. “அமெரிக்கா மீண்டும் மதிக்கப்படும்” என்ற அவரது வாக்குறுதி, “ஒரு சித்தி தன்னை அம்மா என்று அழைக்க சொல்வது போல” உள்ளதாக ஒரு அரசியல் விமர்சகர் குறிப்பிடுகிறார். உலக நாடுகள் அமெரிக்காவை மதிக்கிறதா அல்லது பயப்படுகிறதா என்பது விவாதத்துக்குரியதாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
