அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை மீண்டும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
‘தி அட்லாண்டிக்’ இதழுக்கு ஜனவரி 4, அன்று அளித்த பேட்டியில், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து “நிச்சயம் தேவை” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கிரீன்லாந்து பகுதியில் ரஷ்ய மற்றும் சீன கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த அந்த தீவு முழுமையான அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும் என்று வாதிடுகிறார்.
ட்ரம்ப்பின் இந்த பேச்சுக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மிக கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஒரு இறையாண்மை கொண்ட தேசத்தை விலைக்கு வாங்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ நினைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், நட்பு நாடுகளுக்கிடையே இது போன்ற அச்சுறுத்தல் பேச்சுக்கள் மரியாதையற்றவை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்பதை திட்டவட்டமாக தெரிவித்த ஃபிரடெரிக்சன், நேட்டோ அமைப்பில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் கிரீன்லாந்திற்கு தேவையான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அமெரிக்காவிற்கு டென்மார்க் வழங்கி வருவதாகவும், அதற்கு மேல் அதன் உரிமையை கோருவது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் சூடுபிடிக்க மற்றொரு முக்கிய காரணம், ட்ரம்ப்பின் துணைத் தலைமைப் பணியாளர் ஸ்டீபன் மில்லரின் மனைவி கேட்டி மில்லர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு வரைபடம் ஆகும். கிரீன்லாந்து வரைபடம் முழுவதையும் அமெரிக்க தேசியக்கொடியால் மூடி, அதற்குக்கீழ் “விரைவில்” என்று அவர் பதிவிட்டது டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. ஒரு வரலாற்று ரீதியான நட்பு நாட்டை இவ்வாறு அவமதிப்பது ராஜதந்திர ரீதியான மீறல் என்று டென்மார்க் தூதரக வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.
கிரீன்லாந்து விவகாரம் தற்போது இவ்வளவு தீவிரமாக பேசப்படுவதற்கு பின்னால், வெனிசுலாவில் ஜனவரி 3-ம் தேதி அமெரிக்கா நடத்திய “அப்சல்யூட் ரிசால்வ்” என்ற ராணுவ நடவடிக்கையும் ஒரு பின்னணியாக உள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அமெரிக்கா சிறைபிடித்துள்ள நிலையில், அடுத்த இலக்கு கிரீன்லாந்தாக இருக்குமோ என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளிடையே எழுந்துள்ளது. வெனிசுலாவை தொடர்ந்து மற்ற நாடுகளின் இறையாண்மையிலும் அமெரிக்கா தன்னிச்சையாக தலையிடக்கூடும் என்ற ட்ரம்ப்பின் மறைமுக எச்சரிக்கையே டென்மார்க்கின் இந்த அதிரடி எதிர்வினைக்குக்காரணமாகும்.
கிரீன்லாந்து வெறும் பனிப்பாறைகளால் ஆன தீவு மட்டுமல்ல, அங்குள்ள அபரிமிதமான கனிம வளங்கள் மற்றும் ‘ரேர் எர்த்’ தனிமங்கள் மீது வாஷிங்டன் நீண்ட காலமாகவே ஒரு கண் வைத்துள்ளது. சீனாவிற்கு இணையான கனிம வள விநியோக சங்கிலியை உருவாக்க இது மிக முக்கியமானது என்று அமெரிக்கா கருதுகிறது. மேலும், புவிசார் அரசியலில் ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையே அமைந்துள்ள கிரீன்லாந்தின் அமைவிடம், ஏவுகணை தடுப்பு மற்றும் ஆர்க்டிக் போர் வியூகங்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. 2009-ம் ஆண்டு ஒப்பந்தப்படி தன்னாட்சி அதிகாரம் கொண்டிருந்தாலும், நிதி ரீதியாக டென்மார்க்கை சார்ந்துள்ள கிரீன்லாந்தின் பலவீனத்தை ட்ரம்ப் பயன்படுத்த முயல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.
முடிவாக, ஒரு வல்லரசு நாடு தனது நட்பு நாட்டின் மீது இதுபோன்ற மேலாதிக்க சொற்களை பயன்படுத்துவது சர்வதேச உறவுகளில் ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் ஒரு தேசம், ஒரு ஜனநாயகம்; எங்களை ஒரு வணிக பொருளாக பார்க்காதீர்கள்” என்ற மெட்டே ஃபிரடெரிக்சனின் முழக்கம், ட்ரம்ப்பின் கொள்கைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
ஆர்க்டிக் பிராந்தியத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய தருணத்தில், ஆக்கிரமிப்பு பேச்சுகள் அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை மட்டுமே அதிகரிக்கும் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
