அமெரிக்காவின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிய ஏவுகணை ஒப்பந்தங்களை முன்னெடுத்து வரும் நிலையில், கனடா ஒரு அதிர்ச்சி தரும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறைக்கு அவசியமான கனிம ஏற்றுமதியை கனடா தடுத்து நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைக்கு தேவையான அரிய கனிமங்கள், நிக்கல், தாமிரம் மற்றும் யுரேனியம் போன்ற பொருட்களுக்கான விநியோக சங்கிலி முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை, அமெரிக்க பாதுகாப்புத் துறை உற்பத்தியை கடுமையாக பாதிப்பதுடன், நீண்ட காலமாக நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்த அமெரிக்கா மற்றும் கனடா இடையே ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிளவின் காரணமாக டிரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மரக்கட்டைகள், அலுமினியம், ஸ்டீல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் போன்ற பொருட்களுக்கு 35% வரியை விதித்தார். இதற்கு பதிலடியாக, கனடா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆரஞ்சு சாறு, விஸ்கி, அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு 25% வரி விதித்தது. இதனால், அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்கள் கனடா சந்தையை இழந்தன.
இந்த வர்த்தக போரால், இரு நாடுகளிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் கட்டுமான செலவுகள் உயர்ந்து, புதிய வீடுகளின் விலை சுமார் $10,900 அதிகரித்தது. அமெரிக்க ராணுவத்துக்குத் தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பாதுகாப்புத் துறையில் ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலைக்கு தள்ளப்படலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.
இந்த வர்த்தக போர், கனடாவை அமெரிக்காவை சாராமல், தனக்கென ஒரு புதிய பாதையை உருவாக்கத் தூண்டியது. கனடா, ஐரோப்பா மற்றும் ஆசியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டது. மேலும், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறைகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்க, புதிய கூட்டணிகளை ஏற்படுத்தத் தொடங்கியது. இதன் விளைவாக, உலக அளவில் கனடாவின் நிலை வலுப்பெற்றது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “கோல்டன் டோம்” என்ற புதிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் இணைவதற்கு கனடாவுக்கு ஒரு லட்சம் கோடி டாலர் அபராதம் விதித்துள்ளார். மேலும், அந்த தொகையை செலுத்த மறுத்தால், கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைத்துக்கொள்வோம் எனவும் அறிவித்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு கனடாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற மார்க் கார்னி, “கனடா ஒரு தனிப்பட்ட சுதந்திர நாடு அல்ல என்று டிரம்ப் கருதுகிறார். அமெரிக்கா கனடாவை சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிக்கிறது. அதை நாம் அனுமதிக்க மாட்டோம்” எனவும் உறுதியளித்தார். இந்த சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வர்த்தக போராக உருவெடுத்து, கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
