அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால் அமெரிக்காவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது பிட்காயின் மதிப்பு மீண்டும் உச்சத்திற்கு சென்று உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் வெற்றியை பிட்காயின் சந்தை கொண்டாடி வருவதாகவும், பிட்காயின் வரலாற்றில் முதல் முறையாக 80,000 அருகில் மதிப்பு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் வெற்றி பெற்றால் கிரிப்டோ கரன்சி நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்டம் ஏற்றுவார் என்று ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றவுடன் 79 ஆயிரம் டாலர்களுக்கும் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், பிட்காயின் போலவே மற்ற கிரிப்டோ கரன்சிகளை மதிப்பும் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. கிரிப்டோ கரன்சி நிறுவனங்களுக்கு சாதகமான முடிவை டிரம்ப் எடுப்பார் என்ற நம்பிக்கை காரணமாக பிட்காயின் உள்பட அனைத்து கிரிப்டோகரன்சி மதிப்புகள் உயர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிட்காயின் மதிப்பு படுவீழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதால் பிட்காயினை கையில் வைத்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில், கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வது ஆபத்தானது என்றும் நம்பகத்தன்மை இல்லாத ஒரு முதலீடு என்றும் முதலீட்டு ஆய்வாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வருவதால், மீண்டும் பிட்காயினில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.