நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி மூலம் அரசியலில் நுழைந்ததில் இருந்து, அவர் ஒரு தனி மனிதனாக தமிழக மற்றும் இந்திய அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளார். அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில், விஜய்யின் அரசியல் பயணம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
சிலர் விஜய்யை “எக்ஸ் தளத்தில் கட்சியை தொடங்கியவர்”, “கொள்கை தெரியாதவர்”, “கூத்தாடி” என விமர்சிக்கின்றனர். ஆனால், இந்த விமர்சனங்கள் யாவும் விஜய்யின் அரசியல் பயணம் ஏற்படுத்தும் கலக்கத்தின் வெளிப்பாடே என்று கூறப்படுகிறது.
ஒருபுறம், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், துரை வைகோ, மற்றும் விஜய பிரபாகரன் போன்ற அரசியல் தலைவர்கள் வெளிப்படையாகவே விஜய்யுடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, அமமுக தலைவர் டிடிவி தினகரன், “விஜய் என்ன ஆகாதவரா? அவரோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு?” எனக் கேள்வி எழுப்பியது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் இணைய மாட்டார்கள் என்றாலும், தவெக தலைமையிலான கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேபோல், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், “யார் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்களோ, அவர்களை விமர்சித்து சீமான் வளர்ந்து வருகிறார். விஜய் அண்ணாவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு?” என கேட்டது, எதிர்காலத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான கதவை திறப்பதாக அமைந்துள்ளது.
விஜய்யின் அரசியல் பயணத்தின்போது, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மீதும் தாக்குதல்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், த்ரிஷா ஒரு விருது விழாவில் விஜய் பற்றிப் பேசியதற்கு, “த்ரிஷா தவெக கட்சியில் இருக்கிறார்” எனச் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யா சாஷா லண்டனிலிருந்து திரும்பியபோது, “விஜய்யுடன் அவரது குடும்பம் இல்லை, குடும்பத்தில் விரிசல்” என வதந்திகள் பரப்பப்பட்டன. இவை யாவும், விஜய்யின் இமேஜை டேமேஜ் செய்யும் முயற்சிகள் என்றே அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், விஜய்யின் “கச்சத்தீவை மீட்போம்” என்ற பேச்சு, இலங்கை அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அந்நாட்டு அதிபர் கச்சத்தீவை கொடுக்க மாட்டோம் என பதில் சொன்னதில் இருந்து தெரிய வருகிறது.
இந்த நிலையில் விஜய்யின் திருச்சி அரசியல் சுற்றுப்பயணத்தின்போது, அங்குள்ள ஹோட்டல்கள் அவருக்கு விடுதி தர மறுப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு, பாதுகாப்பு பிரச்சனை அல்லது அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, தொண்டர்கள் “அண்ணா, எங்கள் வீட்டில் தங்குங்கள்” என்று அழைப்பு விடுக்கின்றனர்.
ஒருவேளை விஜய் தொண்டர் ஒருவரின் வீட்டில் தங்க முடிவு செய்தால், அது அரசியல் களத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும். ஏனெனில், “கேரவன் அரசியல்வாதி” என்று அவரை விமர்சிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பதிலடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தனித்து போட்டியிடுவதை விட, கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 2026-ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும், 2031-ஆம் ஆண்டு தேர்தல் விஜய் vs உதயநிதி என்ற போட்டிக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் விஜய்யின் அரசியல் வருகை திராவிட கட்சிகளுக்கு முடிவுரை எழுதும் ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
