isha

எந்த கடையில விலை அதிகமோ அங்கதான் வியாபாரம் நடக்கும்னா, அதுக்கு பேரு கட்சி இல்ல… அது ஒரு ‘சீசன்’ பிசினஸ்! திமுக கதவைத் தட்டுறது, அதிமுக ஜன்னலை எட்டி பார்க்கிறது… கடைசியில வாசல்லயே நிக்கிறதுதான் தேமுதிகவோட தேர்தல் ஸ்ட்ராடஜியா? அன்னைக்கு கேப்டன் பின்னாடி ஒரு படையே இருந்துச்சு… இன்னைக்கும் அந்த படை இருக்கு, ஆனா வழிநடத்தத்தான் ஆள் இல்ல..!

தமிழக அரசியல் களத்தில் தேமுதிக தற்போது சந்தித்து வரும் சவால்கள், அதன் நம்பகத்தன்மை சரிவு குறித்து பல அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவற்றில் சில கருத்துக்களை தற்போது பார்ப்போம். 2011-ஆம்…

premalatha

தமிழக அரசியல் களத்தில் தேமுதிக தற்போது சந்தித்து வரும் சவால்கள், அதன் நம்பகத்தன்மை சரிவு குறித்து பல அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவற்றில் சில கருத்துக்களை தற்போது பார்ப்போம்.

2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக அடைந்த மகத்தான வெற்றி, அந்த பேரியக்கம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்ததை காட்டியது. அன்று திமுகவையே பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் அமர்ந்தது ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஆனால், அந்த வெற்றிக்கு பிறகு தேமுதிகவின் அரசியல் பயணம் இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. விஜயகாந்த் என்ற தனிமனித ஆளுமைக்காக திரண்ட அந்த தொண்டர் படை, தற்போது ஒரு கொள்கை ரீதியான பிணைப்பு அல்லது வலுவான தலைமை இல்லாத காரணத்தால் சிதற தொடங்கியிருப்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது.

தேமுதிக இன்று சந்திக்கும் பின்னடைவுக்கு அந்த தலைமையின் தடுமாற்றமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அந்த பெரிய வெற்றிடத்தை பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் நிரப்ப முடியவில்லை என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக, ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான சித்தாந்தத் தெளிவு அல்லது மக்களுக்கான போராட்ட களத்தில் தொடர்ச்சியான பங்களிப்பு போன்ற எதுவுமே தேமுதிகவிடம் தற்போது தென்படவில்லை. பாம்புக்கு தலையாகவும் மீனுக்கு வாலாகவும் செயல்படும் தந்திரமான அரசியல் போக்கு ஒரு காலத்திற்கு மேல் எடுபடாது என்பதையே அக்கட்சியின் தற்போதைய நிலை உணர்த்துகிறது. வெற்றி மட்டுமே கொள்கை என்று பேசுவது ஒரு முதிர்ந்த அரசியல் நிலைப்பாடாக இருக்க முடியாது என்பதுடன், அது தொண்டர்களிடையே குழப்பத்தையே விளைவிக்கும்.

விஜயகாந்த் காலத்திலேயே ஊடகங்களுடனான மோதல் போக்கு இருந்தபோதிலும், தற்போது பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஊடகவியலாளர்களை எதிர்கொள்ளும் விதம் ஏதோ ஒரு மேலாதிக்க மனப்பான்மையுடன் இருப்பதாக தெரிகிறது. விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாத தலைமை, கட்சியின் பலவீனத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த இயக்கம், கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு மக்கள் போராட்டத்திலும் முன்னிற்கவில்லை என்பது அக்கட்சியின் நம்பகத்தன்மையை வெகுவாக குறைத்துவிட்டது.

கூட்டணி பேச்சுவார்த்தைகளை பொறுத்தவரை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் தேமுதிகவை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்க தயாராக இல்லை என்பதே தற்போதைய கள யதார்த்தம். இரு அணிகளிடமும் ஒரே நேரத்தில் பேரம் பேசுவதும், கடைசி நிமிடம் வரை இழுத்தடிப்பதும் அக்கட்சியின் மதிப்பை இழக்க செய்துவிட்டது. அதிமுக போன்ற பெரிய கட்சிகளே தேமுதிகவை ஒரு பொருட்டாக மதிக்காத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது சுயபரிசோதனைக்குரிய விஷயமாகும். மாநிலங்களவை உறுப்பினர் பதவி போன்ற பெரிய வாய்ப்புகள் கதவு தேடி வந்தபோதும், அதனை சரியாக பயன்படுத்தத் தவறியது அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக அணியில் இணைந்தால் மட்டுமே கட்சியின் எதிர்காலம் இருக்கும் என்று அக்கட்சியின் நிர்வாகிகளே கருதும் சூழல் உருவாகியுள்ளது.

மொத்தத்தில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுமே தேமுதிகவை கிட்டத்தட்ட கைவிட்ட நிலையில் நட்டாற்றில் அந்த கட்சி நிற்கிறதோ என்ற எண்ணம் தான் பலருக்கு ஏற்படுகிறது.