திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான விபத்து ஏற்பட்டு பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர்.
வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் தரிசனம் காண இலவச டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் 90 இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. விஷ்ணு நிவாசம், ராமநாயுடு பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் இதற்கான கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கவுண்டர்கள் திறக்கப்படுவதற்கு முன்பே அந்த இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
மேலும் காவல் துறைக்கும், திருப்பதி தேவஸ்தானத்திற்கும் இடையே சரியான திட்டமிடல் இல்லாததால் விஷ்ணுநிவாசம் பகுதியில் கவுண்டர்கள் திறக்கப்பட்டதும் பக்தர்கள் இலவச டோக்கனைப் பெறுவதற்காக ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் பலத்த நெரிசல் ஏற்பட்டது. இதில் சிலர் கீழே விழ அவர்கள் மீது ஒருவரையொருவர் ஏறிச் சென்ற போது மயக்கமடைந்தனர். சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டிருந்தாலும், தக்க சமயத்தில் ஓட்டுநர்கள் வராததால் சிலர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பக்தரும் உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏதாதசி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்தக் காலகட்டங்களில் பக்தர்கள் நாள் முழுக்க காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வர்.
விபத்தில் மொத்த குடும்பத்தையும் இழந்த முதியவர்.. 36 ஆண்டுகளாக செய்யும் புனிதம்..
இந்நிலையில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட இந்த விபத்திற்கு பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்புக் குறைபாடே விபத்திற்குக் காரணம் என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது ஆந்திர அரசு. ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.25இலட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டோரையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.