திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ரெமன் என்பவரது கடையில் சுமார் 275 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்ற வழக்கில் கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொள்ளையன் சிக்கியது எப்படி என்று பார்ப்போம்.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ரெமன் என்பவர் மூலைக்கரைப்பட்டி மெயின் பஜாரில் ஒரே கட்டிடத்தில் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கடையின் பின்பக்கத்தில் துளையிட்டு உள்ளே புகுந்தனர். அடகு கடையில் இருந்த லாக்கரை உடைத்து அதில் சுமார் 275 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 9 தனிப்படை அமைத்து மர்மநபர்களை பல்வேறு இடங்களில் போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மூலைக்கரைப்பட்டி அடுத்த முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள ரெட்டார்குளம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ராமகிருஷ்ணன் (வயது 40) என்பவர் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தனிப்படையினர் ரெட்டார்குளத்தில் உள்ள ராமகிருஷ்ணன் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். அவர் அங்கு இல்லை. அவர் திருமணமாகி ஹைதரபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து தனிப்படையினர் ஹைதரபாத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த ராமகிருஷ்ணனை அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 100 பவுன் நகைகளும், ரூ.11 லட்சம் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது. ராமகிருஷ்ணனை போலீசார் திருநெல்வேலி அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் அவர் மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா?, கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகள் எங்கே என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.