ஏழுமலையானை தரிசிக்க இலவச டிக்கெட் திருப்பதியில் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
திருப்பதியில் நாளை முதல் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்னதாக தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டிக்கெட் வெளியிட்ட 10 நிமிடங்களில் ஒரு மாதத்திற்கு உண்டான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகின்றன.
இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாமலும், இணையதள பயன்பாடு தெரியாதவர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
இதனால் நாளை (15ம் தேதி) முதல் மீண்டும் இலவச தரிசன டிக்கெட்டுகளை திருப்பதியில் வழங்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக திருப்பதி ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் நாளை காலை 9 மணிக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆதார் கார்டை வைத்து வழங்கப்பட உள்ளது.
இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் 16ம் தேதி (புதன்கிழமை) காலை முதல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து தினமும் 10 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் வழங்கி தரிசனத்துக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.