தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா? 233 தொகுதிகள் கேட்பார் பிரேமலதா.. விஜயகாந்த் மகனின் ஒரு படத்தை கூட ஓட்ட வைக்க முடியலை.. துக்ளக் வாசகர் ரவி TDS

  தே.மு.தி.க. எல்லாம் ஒரு கட்சியே இல்லை. விஜயகாந்த் மறைந்தவுடன் அந்த கட்சியும் மறைந்துவிட்டது. விஜயகாந்தின் மகனின் ஒரு படத்தை கூட ஓட்ட வைக்க முடியாத தே.மு.தி.க. தொண்டர்களால் ஒரு கட்சியை எப்படி ஆட்சிக்கு…

premalatha

 

தே.மு.தி.க. எல்லாம் ஒரு கட்சியே இல்லை. விஜயகாந்த் மறைந்தவுடன் அந்த கட்சியும் மறைந்துவிட்டது. விஜயகாந்தின் மகனின் ஒரு படத்தை கூட ஓட்ட வைக்க முடியாத தே.மு.தி.க. தொண்டர்களால் ஒரு கட்சியை எப்படி ஆட்சிக்கு வரவழைக்க முடியும்?” என்று துக்ளக் வாசகர் ரவி TDS ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை, ஏற்கனவே சில கட்சிகள் இருக்கும் நிலையில், அதில் மேலும் சில கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் உள்ளே இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், யூடியூப் சேனல் ஒன்றுக்கு துக்ளக் வாசகர் ரவி TDS அளித்த பேட்டியில், “வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகள் சில இடம் மாறும்” என்று தெரிவித்தார். “தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வந்தால், விடுதலை சிறுத்தைகள் வெளியேறி விஜய் கட்சியுடன் சேரும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறினால் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியேறும்” என்றும் அவர் தெரிவித்தார். அதன் பிறகு, “தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க. ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

தே.மு.தி.க. அந்தக் கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தே.மு.தி.க.வுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அந்த கட்சி விஜயகாந்த் மறைந்தவுடன் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது” என்று கூறிய அவர், “விஜயகாந்தின் மகன் நடித்த படம் ஒன்று சமீபத்தில் வெளிவந்தது. அந்த படத்தை அவரது கட்சியின் தொண்டர்கள் கூட பார்க்கவில்லை. அதனால்தான் அந்த படம் படுதோல்வி அடைந்தது” என்று தெரிவித்தார். “தங்கள் தலைவர் விஜயகாந்த் மகன் நடித்த ஒரு படத்தையே ஓட்ட வைக்க முடியாத தே.மு.தி.க. தொண்டர்கள் தேர்தலில் எப்படி வேலை செய்வார்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, “தே.மு.தி.க. பேராசைக்கார கட்சி என்றும், தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 233 தொகுதிகளை எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்பார்கள் என்றும், அவர்கள் கேட்கும் தொகுதியை கேட்டாலே கூட்டணி கட்சிகளுக்கு தலை கிறுகிறுக்கும்” என்றும் கூறினார்.

விஜயகாந்த் இருக்கும்போது பிரதமர் மோடி உட்பட பா.ஜ.க.வினர் அந்த கட்சிக்கு மரியாதை கொடுத்தனர் என்றும், பிரதமர் மோடியே தனிப்பட்ட முறையில் விஜயகாந்துக்கு மரியாதை கொடுத்தார் என்றும், ஆனால் அதன் பின்னர் அந்த கட்சி தனது செல்வாக்கையும், வாக்கு சதவீதத்தையும் இழந்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. அப்படியே இணைந்தாலும், அந்த கூட்டணிக்கு எந்தவித பெரிய லாபமும் இருக்காது என்றும் ரவி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், துக்ளக் வாசகரின் இந்தக் கருத்துக்கு தே.மு.தி.க. தொண்டர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.