தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட வட தமிழகத்தினை புரட்டி எடுத்தது. தற்போது மீண்டும் தென் மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.
இதனால் திண்டுக்கல், தேனி, நெல்லை, தூத்துகுடி, விருதுநகர், தென்காசி, நீலகிரி, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் அணைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவை நிரம்பி வழிகின்றன. இதனால் கரையோரங்களில் உள்ள ஊர்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை தான் கனமழையால் பெரிதும் பாதிக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை என்ற வானிலை செய்தியைக் கேட்டதுமே வாகன ஓட்டிகள் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களை முன்னெச்சரிக்கையாக மேம்பாலங்களில் வாடிக்கையாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக பைக், கார் உள்ளிட்டவை நீரில் மூழ்கி ஏராளமான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. எனவே மேமபாலங்களில் வாகனத்தை நிறுத்த ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாக போக்குவரத்துக் காவல்துறை அபராதம் விதித்த நிலையில், எதிர்ப்புகள் வலுக்கவே பின்னர் அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு இரண்டு, மூன்று நாட்கள் மட்டும் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசு 2025 .. மளிகை தொகுப்பு பொருட்கள் குறித்து தமிழக அரசு குட்நியூஸ்
தற்போது இதே பாணியைத் தூத்துக்குடி மக்களும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புன்னைக்காயல், திருச்செந்தூர், ஏரல், ஸ்ரீ வைகுண்டம், ஒட்டபிடாரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. போக்குவரத்தும் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர் பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மேம்பாலங்களில் வாகனத்தினை பார்க்கிங் செய்யத் தொடங்கியுள்ளனர். கனமழை நீடிக்கும் என்பதால் இன்னும் பலர் வாகனங்களை மேம்பாலத்திற்கு கார்களை பார்க்கிங்காக படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.