தமிழக அரசியல் களத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சியும், அவர் வகுக்கும் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளும், இந்திய அரசியலின் அடிப்படை கேள்வியான ‘வெற்றிக்காக கொள்கைகளை தியாகம் செய்யலாமா?’ என்பதை மீண்டும் விவாத பொருளாக்கியுள்ளது. அரசியல் வெற்றியை மட்டுமே இலக்காக கொள்ளும் இன்றைய காலகட்டத்தில், கொள்கை எதிரிகள் கூட கூட்டணி அமைப்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாகி விட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்திய மற்றும் தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், தத்துவார்த்த ரீதியாக பரம எதிரிகளாக இருந்த கட்சிகள் கூட, தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கூட்டணி அமைத்த பல உதாரணங்களைக் காண முடியும்.
ஜெயலலிதா – விஜயகாந்த் கூட்டணி: அதிமுகவும், விஜயகாந்தின் தேமுதிகவும் கொள்கை ரீதியாக வேறுபட்டிருந்தாலும், 2011 சட்டமன்ற தேர்தலில் இணைந்து மாபெரும் வெற்றியை பெற்றன. இந்த வெற்றி கூட்டணி, திமுகவை எதிர்க்கட்சியாக கூட வரவிடாமல் தடுத்தது.
மூப்பனார் – ஜெயலலிதா கூட்டணி: அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த ஜிகே மூப்பனார், காங்கிரஸிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கினார். ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் ஊழல் அரசியலுக்கு எதிராகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ‘ஊழல் ராணி’ என்று விமர்சித்த போதிலும், அரசியல் நிலைப்பாடுகள் மாறியபோது, 2001 சட்டமன்ற தேர்தலில் தமாகா மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இது, “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரமானது நலன்களே” என்ற கூற்றை நிரூபித்தது.
இந்த வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், “கூட்டணிக்கும் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை. அரசியலில் ஒரே குறிக்கோள் வெற்றி தான். அந்த குறிக்கோளுக்காக எந்த சமரசமும் செய்ய அரசியல் கட்சிகள் தயாராக இருக்கும்,” என்று உறுதியாக தெரிவிக்கின்றனர். கொள்கை சார்ந்த அரசியலை மட்டுமே முன்னிலைப்படுத்துவது, வெற்றி அரசியலுக்கு உகந்ததல்ல என்ற யதார்த்தத்தை இன்றைய அரசியல் களம் உணர்த்துகிறது.
“கொள்கையை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால், நாம் தமிழர் கட்சி போல கடைசி வரை டெபாசிட் வாங்க கூட முடியாமல் போகும்” என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தில், அதிக இடங்களை பெற்று அதிகாரத்தில் அமர்ந்தால் மட்டுமே கொள்கைகளை செயல்படுத்த முடியும். வெறுமனே கொள்கை பிடிப்புடன் இருந்து, மக்களை சென்றடைய முடியாமல் போனால், அந்த கொள்கைகள் புத்தக பக்கங்களிலேயே முடங்கிவிடும் என்ற கடுமையான உண்மையை அவர்கள் முன்வைக்கின்றனர். இன்றைய அரசியல் ராஜதந்திரத்தின் ஒரே விதி வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்த கொள்கையையும் விட்டுக்கொடுக்கலாம்.
இந்தியாவில் ஒரு காலத்தில் அரசியல் நாகரிகமும், தூய்மையும் இருந்தது. அந்த அரசியல் காமராஜர் காலம் என வர்ணிக்கப்படுகிறது. இது காமராஜர் காலத்து நாகரிக அரசியல் அல்ல. அப்போது தனி மனித தாக்குதல் இருக்காது, சூழ்ச்சி இருக்காது, அரசியலில் ஒரு தூய்மை இருந்தது. ஆனால், இப்போது ஆட்சியை பிடிக்க அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இன்றைய அரசியல் நிலையே வேறு,” என்று அரசியல் விமர்சகர்கள் வேதனையுடன் சுட்டி காட்டுகின்றனர்.
இன்றைய அரசியலில் நேர்மை, தார்மீகம், கொள்கை பிடிப்பு போன்ற உயர் மதிப்புகளுக்கு இடமில்லை. அதிகாரத்தை கைப்பற்ற, பழிவாங்கும் நடவடிக்கை, தனிப்பட்ட அவதூறுகள், ஊடக பிரச்சாரங்கள், அரசியல் சூழ்ச்சிகள் என அனைத்தும் அரங்கேறுகின்றன.
நடிகர் விஜய், தான் ஒரு காமராஜர் காலத்து நாகரிக அரசியலை மீண்டும் கொண்டு வர விரும்புவதாகவும், மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் பேசி வருகிறார். கொள்கை எதிரிகளை தவிர்ப்பது, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடாமல் இருப்பது போன்ற ஒரு தூய்மையான அரசியலை கடைப்பிடிக்க அவர் முனைப்பு காட்டலாம்.
ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையில், “கொள்கை எதிரியுடன் கூட்டணி வைக்க மாட்டேன்” என்று கூறுவது வேலைக்கு ஆகாது. இந்த அழுத்தம் மிகுந்த அரசியல் களத்தில், தன்னை பாதுகாத்து கொள்ளவும், வெற்றியை அடையவும், விஜய்யின் த.வெ.க.வும் தற்போதைய அரசியல் யதார்த்தத்திற்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய்யின் விருப்பமான நாகரிக அரசியல் நிறைவேறுமா? அல்லது இன்றைய அரசியலின் கொடூரத்தை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கி விடுவாரா? அல்லது காலத்தின் கட்டாயமாக, வெற்றிக்கான சமரசங்களை செய்து கொண்டு தனது கொள்கை பிடிப்பை விட்டு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவரது அரசியல் பயணம், தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான ஒன்றாக அமைய உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
