நமது அன்பிற்குரியவர்கள் கொடுத்த பொருள் தொலைந்து போனாலோ அல்லது களவு போனாலோ அல்லது நம்மிடம் இருக்கும் 50 ரூபாயை யாராவது திருடி விட்டாலோ நாம் எவ்வளவு பதைபதைப்போம். திருடியவரை சும்மா விடுவோமா..? அப்படியும் திருடன் கிடைக்காவிடில் சாபமாவது விடுவோம் அல்லவா? இருப்பினும் திருடியவர்களில் சில நல்லவர்களும் இருக்கின்றனர். மனசாட்சிக்குப் பயந்து, பாவம் சேர்க்க வேண்டாம் என எண்ணி நாளடைவில் திருந்தி மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கின்றனர்.
அந்த வகையில் அப்படி ஒருவர் சிறிய வகையில் ரூ.37.50 திருடியதற்காக இன்று அந்தக் கடனை தீர்க்க அந்தக் குடும்பத்தாரிடம் 50 வருடங்கள் கழித்து 3 இலட்சமாக திருப்பிக் கொடுத்து தனது கடனைத் தீர்த்திருக்கிறார். இலங்கை நுவரேலியா மாவட்டத்தினைச் சேர்ந்தவர் ரஞ்சித். கடந்த 1970-ல் அதே பகுதியில் இவர் வீட்டின் அருகே வசித்தவர் எழவாய். ஒருமுறை எழவாய் என்ற அந்தப் பெண் தனது வீட்டினைக் காலி செய்யும் போது அப்போது சிறுவனாக இருந்த ரஞ்சித்தை பொருட்களை மாற்றி வைக்க உதவிக்கு அழைத்திருக்கிறார். அப்போது எழவாய் சிறுசிறுகச் சேமித்து வைத்திருந்த பணமான ரூ. 37.50 தலையணை அடியில் வைத்திருக்கிறார்.
பொருட்களை எடுக்கும் போது ரஞ்சித் இந்தப் பணத்தினைப் பார்த்து அப்போது அதை அவர் எடுத்துக் கொண்டார். அதன்பின் எழவாய் தனது பணத்தினை பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளார். மேலும் ரஞ்சித்தையே அழைத்துக் கொண்டு கோவிலிலும் முறையிட்டிருக்கிறார். ஆனால் ரஞ்சித் தான் எடுத்தது குறித்து கூறவில்லை.
செல்போனே தொடாமல் இருக்கும் போட்டி.. 1.16 லட்சம் பரிசை தட்டித் தூக்கிய பெண்..
அதன்பின் ரஞ்சித் தமிழகம் வந்து விட்டார். இச்சம்பவம் நடந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது ரஞ்சித் கோவையில் தொழிலதிபராக உள்ளார். வருடங்கள் பல உருண்டோடினாலும் அவருக்கு இந்தப் பணத்தினை எடுத்தது மனதினை உறுத்த அந்தப் பணத்தினை எப்படியாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி ரூ.37.50-ஐ இன்றைய மதிப்பில் 3 லட்சமாகக் கொடுக்க எண்ணி தான் யாரிடம் எடுத்தோமோ அவரைக் காணச் சென்றிருக்கிறார்.
அவர் உயிரிழந்து விட்டதால் அவரின் பிள்ளைகளைக் கண்டறிந்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 70,000 எனக் கொடுத்து தனது கடனையும், பாவச் சுமையையும் இறக்கி வைத்திருக்கிறார் ரஞ்சித். மேலும் அவரைக் காணச் செல்லும் போது அவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் போன்றவற்றையும் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்.
ரஞ்சித்தின் இந்த செயலை எண்ணி எழவாய் குடும்பத்தினர் மனம் நெகிழ்ந்தனர். மேலும் இவரின் இந்த நல்ல உள்ளத்தினை பலரும் பாராட்டி வருகின்றனர்.