தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கட்சியின் சின்ன விசில என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த சில நிமிடங்களிலேயே, அது பட்டிதொட்டியெங்கும் காட்டுத்தீ போலப் பரவி ஒரு மிகப்பெரிய அலையை உருவாக்கியுள்ளது. வழக்கமாக ஒரு கட்சியின் சின்னம் மக்களிடையே சென்றடைய மாதக்கணக்கில் காலம் எடுக்கும். ஆனால், விஜய்யின் ‘விசில்’ சின்னம் சமூக வலைதளங்கள் முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை பத்தே நிமிடத்தில் நீக்கமற நிறைந்துவிட்டது. இதுதான் நிஜமான ‘விஜய் பவர்’ என்று அவரது தொண்டர்கள் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி #Whistle , #WhistlePodu போன்ற ஹேஷ்டேக்குகள் டிரண்டில் உள்ளது.
இத்தனை காலமும் விஜய் மக்கள் முன்னால் வரவில்லை, ஊடகங்களை சந்திக்கவில்லை, தெருவில் இறங்கி போராடவில்லை என்று விமர்சனம் செய்தவர்களுக்கு இந்த வரவேற்பு ஒரு தகுந்த பதிலடியாக அமைந்துள்ளது. “அவர் வெளியே வரவேண்டிய அவசியமே இல்லை” என்று தவெகவினர் மிக துணிச்சலாக கூறுகின்றனர். ஒரு தலைவனுக்காக மக்கள் எந்த அளவுக்கு காத்திருக்கிறார்கள் என்பதற்கு, சின்னம் அறிவிக்கப்பட்டவுடன் வீதிகளில் விசில் சத்தம் விண்ணை பிளப்பதே சாட்சியாக உள்ளது. மக்களே ஒரு தலைவருக்காக தாமாக முன்வந்து வீதிக்கு வருவதுதான் உண்மையான அரசியல் எழுச்சி என்பதை இந்த பதிவுகள் உணர்த்துகின்றன.
விசில் என்பது வெறும் சின்னம் மட்டுமல்ல, அது ஒரு மாற்றத்திற்கான அறைகூவல் என்று தவெக தொண்டர்கள் கருதுகின்றனர். விளையாட்டு திடலில் ஆட்டத்தை தொடங்குவதற்கும், ஒரு தவறு நடக்கும்போது அதை சுட்டிக்காட்டுவதற்கும் விசில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, தமிழக அரசியலில் நிலவும் தேக்க நிலையை உடைத்து, புதியதொரு ஆட்டத்தை தொடங்கவே இந்த விசில் சின்னம் கிடைத்துள்ளதாக கொண்டாடுகின்றனர். விசில் சின்னத்தின் எளிமை, சாதாரண பாமர மக்களையும் எளிதில் சென்றடைந்துவிடும் என்பது தவெகவின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
தவெகவினர் இணையதளங்களில் பகிர்ந்து வரும் “எங்க சின்னம் விசில் சின்னம்” என்ற வாசகங்கள் தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விசில் சத்தம் அனைத்து தொகுதிகளிலும் பலமாக ஒலிக்கும் என்றும், அது எதிர்த்தரப்பினருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யாமல், விஜய்யின் முகம் மற்றும் அவர் மீதான அன்பு மட்டுமே இந்த சின்னத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
பொதுமக்களும் இந்த சின்னத்தை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை கவரும் வகையில் இந்த சின்னம் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மற்ற கட்சிகள் சின்னங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க போராடும் நிலையில், விஜய் ஒரு வீடியோ அல்லது புகைப்படத்தை பகிர்ந்தாலே அது கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் வலிமை கொண்டது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக விஜய் வெளியே வருவாரா என்று கேட்டவர்களுக்கு, விஜய்க்காக மக்கள் வெளியே வந்து ஓட்டுப் போடுவார்கள் என்பதே தொண்டர்களின் பதிலாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2026-ல் இந்த விசில் சத்தம் வெற்றிக் களிப்பாக மாறுமா அல்லது ஒரு சாதாரண சத்தமாகப் போய்விடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், தற்போதைய நிலையில் விஜய்யின் பலமும், அவரது தொண்டர்களின் வேகமும் எதிர்க் கட்சிகளுக்கு ஒரு தற்காலிக அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
