isha

விஜய்யை காட்டி தான் எல்லா கட்சியும் அரசியல் செய்யுது.. அதிக சீட், ஆட்சியில் பங்கு கொடு, இல்லையேல் விஜய் கூட்டணிக்கு போயிருவேன்.. காங்கிரஸ் மிரட்டுது, விசிக மிரட்டுது, மதிமுக மிரட்டுது.. விஜய் கூட போவாங்களோ இல்லையோ, விஜய்யை காட்டி பயமுறுத்துகின்றன.. திமுகவும் விஜய் கூட போயிருவாங்களோன்னு பயப்படுது.. 2026 தேர்தலில் வெற்றியோ தோல்வியோ, விஜய் தான் ஆட்டநாயகன்..!

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் முன்பெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதுமையான போக்கை கண்டு வருகிறது. பொதுவாக தேர்தலுக்கு முன்னதாக பிரதான கட்சிகளே மற்ற கட்சிகளை இழுக்க போராடும். ஆனால், இந்த முறை…

vijay rahul thiruma

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் முன்பெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதுமையான போக்கை கண்டு வருகிறது. பொதுவாக தேர்தலுக்கு முன்னதாக பிரதான கட்சிகளே மற்ற கட்சிகளை இழுக்க போராடும். ஆனால், இந்த முறை தமிழக வெற்றி கழகத்தின் வருகைக்கு பிறகு, ஒட்டுமொத்த அரசியலும் நடிகர் விஜய்யை சுற்றியே சுழல தொடங்கியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க விஜய்யை ஒரு கருவியாக பயன்படுத்த தொடங்கியுள்ளன. “கூடுதல் தொகுதிகள் கொடு, ஆட்சியில் பங்கு கொடு; இல்லையேல் எங்களுக்கு மாற்று வழிகள் உண்டு” என்று மறைமுகமாக விஜய்யை காட்டி மிரட்டும் போக்கு கூட்டணிக்குள் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, கடந்த தேர்தல்களை விட இந்த முறை அதிக இடங்களை கோருவதோடு, ‘அமைச்சரவையில் பங்கு’ என்ற கோரிக்கையை மிக தீவிரமாக முன்வைக்கிறது. 2006-ல் செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வருவது, திமுக தலைமைக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஒருவேளை திமுக இறங்கி வரவில்லை என்றால், “இயல்பான நட்பு” என்று விஜய்யை நோக்கி காங்கிரஸ் ஒரு காலை எடுத்து வைக்கக்கூடும் என்ற அச்சம் திமுகவிற்குள் இருக்கிறது. இதனால், ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் இடையிலான தனிப்பட்ட நட்பையும் தாண்டி, தொகுதி பங்கீடு என்பது இந்த முறை ஒரு அக்னி பரீட்சையாகவே இருக்கும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் தான் நீடிப்போம் என்று வெளியில் சொல்லி கொண்டாலும், விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் மேலும் சில கட்சிகள் இதே பாணியை பின்பற்றுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் அவ்வப்போது அதிகார பகிர்வு குறித்துப் பேசி வருவது, திமுக மேலிடத்தை சிந்திக்க வைத்துள்ளது. பாஜக-வை எதிர்க்கும் மதச்சார்பற்ற அணியில் நாங்கள் இருக்கிறோம், ஆனால் எங்களது உரிமைகள் மறுக்கப்படும்போது மாற்று அணியை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் என்ற தொனி அவர்களின் பேச்சில் இழையோடுகிறது. விஜய் தனது கொள்கை எதிரியாக திமுகவை அறிவித்திருந்தாலும், கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்ற ஆஃபரை வழங்கியிருப்பது இந்த சிறிய கட்சிகளுக்கு ஒரு பெரிய பிடிமானத்தை கொடுத்துள்ளது.

விஜய்யை காட்டித் தங்களது கூட்டணி கட்சிகள் பேரம் பேசுவதை திமுக ரசிக்கவில்லை. விஜய் ஒரு முதிர்ச்சி அடையாத அரசியல்வாதி என்று திமுக நிர்வாகிகள் விமர்சித்தாலும், உள்ளுக்குள் அவரது மக்கள் செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆதரவு திமுகவின் ஓட்டு வங்கியில் ஓட்டை போடுமோ என்ற பயம் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சேலத்தில் நடந்த பிரம்மாண்ட பேரணியில் பேசிய விஜய், தனது அதிகார பகிர்வு அறிவிப்பு அரசியல் களத்தில் ஒரு பயங்கரமான வெடிகுண்டாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டினார். திமுக தரப்பு இதனால் நிலைகுலைந்து போயிருப்பதாகவும், அதனால்தான் அவசர அவசரமாக பெண்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை போன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்றும் அவர் விமர்சித்தார். வெற்றியோ தோல்வியோ, நான் ஒரு மாற்றத்தை விதைக்க வந்துள்ளேன்” என்ற அவரது பிடிவாதம் கூட்டணி கணக்குகளை சிக்கலாக்கியுள்ளது.

இறுதியாக, 2026 தேர்தலை பொறுத்தவரை விஜய் ஒரு கேம் சேஞ்சராக உருவெடுத்துள்ளார் என்பதில் மாற்று கருத்தில்லை. அவர் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார் என்பது ஒருபுறம் இருந்தாலும், மற்ற கட்சிகளின் தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கூட்டணி மாற்றங்களை தீர்மானிக்கும் மையப்புள்ளியாக அவர் மாறியுள்ளார். அரசியல் விமர்சகர்கள் சொல்வது போல, இந்த தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், களத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆட்டநாயகன் என்ற பெருமை விஜய்க்கே சேரும். திமுகவின் கோட்டையை விஜய்யின் ‘விசில்’ சத்தம் அதிர வைக்குமா அல்லது திராவிட மாடல் அந்த சவாலை முறியடிக்குமா என்பது மே 2026-ன் முடிவுகளில் தெரிந்துவிடும்.