அமெரிக்காவில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஒரு மசோதா, இந்திய ஐ.டி. நிறுவனங்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹயர் சட்டம் 2025’ என்று அழைக்கப்படும் இந்த மசோதா, சட்டமாக மாறினால், அது இந்திய ஐ.டி. துறையில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இது என்ன சட்டம், அமெரிக்கர்கள் இதை ஆதரிப்பார்களா, இதனால் இந்திய ஐ.டி. துறைக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
ஹயர் சட்டம் 2025 என்றால் என்ன? என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ‘ஹயர்’ (HIRE) என்பதன் முழு வடிவம், “Holing International Relocation of Employment” என்பதாகும். இந்த மசோதாவின்படி, ஒரு அமெரிக்க நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு சேவைகளுக்காக செலவழிக்கும் பணத்தில் 25% வரி செலுத்த வேண்டும். இந்த வரியானது, நிறுவனத்தின் ஃபெடரல் வரி கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளப்பட முடியாது. அதாவது, இது ஒரு கூடுதல் செலவினமாகவே கருதப்படும்.
இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம், அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வேலைகளை வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்வதை தடுத்து, அந்த வேலைகளை அமெரிக்கர்களுக்குள்ளேயே தக்கவைத்து கொள்வதுதான்.
இந்த சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அமெரிக்காவுக்கு என்ன லாபம் என்றால் அமெரிக்காதங்கள் நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்று கருதுகிறது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் 25% வரி பணத்தை, அமெரிக்க பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்த முடியும் என்று இந்த மசோதா கூறுகிறது.
தற்போது, அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் மொத்த சேவைகளில் வெறும் 3% மட்டுமே வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்கின்றன. இதில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கே பெரும் பகுதி செல்கிறது. இந்த 3% அவுட்சோர்சிங் மூலம், இந்தியாவின் விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் 50% வரை அமெரிக்காவில் இருந்தே பெறுகின்றன. இந்த சட்டம் அமலானால், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்வதை நிறுத்திவிட்டு, தங்கள் நாட்டுக்குள்ளேயே அந்த வேலைகளை செய்யத் தொடங்குவார்கள். இதனால், இந்திய ஐ.டி. நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும்.
இந்த சட்டம், தகவல் தொழில்நுட்பத் துறை (Information Technology), வாடிக்கையாளர் ஆதரவு (Customer Support), பேக்-ஆஃபீஸ் (Back-Office), வடிவமைப்பு (Design), மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) போன்ற பல துறைகளை பாதிக்கும். இந்தியாவில் உள்ள பல கால் சென்டர்கள் மற்றும் பி.பி.ஓ. (BPO) நிறுவனங்கள், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை நம்பி இயங்குகின்றன. இந்த நிறுவனங்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும்.
இந்த மசோதா, உலகமயமாக்கல் என்ற பொருளாதார கோட்பாட்டிற்கு எதிரான ஒரு நகர்வாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தன்னுடைய நலனுக்காக மட்டும் செயல்பட தொடங்கினால், சர்வதேச வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு கடுமையாக பாதிக்கப்படும். இது அமெரிக்காவிற்கு சாதகமாக தோன்றினாலும், நீண்ட கால அடிப்படையில், உலக பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தடையாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த மசோதா இன்னும் சட்டமாக மாறவில்லை. அதற்கு 30% வாய்ப்புகள் மட்டுமே உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால், இது ஒருமுறை சட்டமாகிவிட்டால், அதை எதிர்ப்பது கடினம். இது இந்திய ஐ.டி. துறையை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி, லட்சக்கணக்கான வேலைகளை பாதிக்க வாய்ப்புள்ளது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் தற்போது ஐடி துறையில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் வேலையில்லாமல் போவார்கள், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று கூறப்பட்டாலும், இந்திய இளைஞர்கள் வேலைபோய்விட்டதே என்று கவலைப்பட்டு மூலையில் படுத்திருக்கும் சோம்பேறிகள் அல்ல. அவர்களுக்கு எந்த வேலையும் பார்க்க தெரியும். இதுவரை வேலைபார்த்து சம்பாதித்த பணத்தில் இருந்து இளைஞர்கள் ஸ்டார்ட் அப் ஆரம்பிக்க வாய்ப்பு உண்டு. மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் கடன் கொடுத்து உதவி செய்தால், நாம் பிற நாடுகளுக்கு அவுட்சோர்ஸிங் செய்யும் அளவுக்கு உயர முடியும். அமெரிக்காவை நம்பி நாம் இல்லை என்பதை நிரூபிப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
