தமிழக வெற்றிக் கழகம் தனது மூன்றாவது ஆண்டில் தடம் பதிக்கும் இந்த வேளையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அக்கட்சி கடந்து வந்த பாதை வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது. தொடக்கத்தில், பிப்ரவரி இரண்டாம் தேதி வெறும் சமூக வலைதள அறிவிப்பாக மட்டுமே இக்கட்சி உருவானபோது, இது ஒரு ‘எக்ஸ்’ தளக் கட்சி என்று பலரால் விமர்சிக்கப்பட்டது. ஒரு புதிய கட்சியை தொடங்கும் ஒரு சினிமா நட்சத்திரம், பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் அல்லது மாநாடு நடத்தி தனது பலத்தை காட்டுவதுதான் வழக்கம். ஆனால், விஜய் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக கட்சியை அறிவித்தார். இந்த எளிமை ஆரம்பத்தில் கேலி செய்யப்பட்டாலும், இன்று அதுவே ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான விதையாக மாறியிருப்பதை மறுக்க முடியாது.
கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே ‘வெற்றிக் கழகம்’ என்பதில் ‘இக்கு’ விடுபட்டுவிட்டது போன்ற சிறுபிள்ளைத்தனமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற அக்கட்சியின் முதல் மாநில மாநாடு அமைந்தது. எந்தவித பணப்பரிமாற்றமும் இன்றி, வெறும் உணர்வின் அடிப்படையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அங்கு திரண்டது ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் திரும்பி பார்க்க வைத்தது. விக்கிரவாண்டி மாநாடு என்பது விஜய்யின் அரசியல் வாழ்வின் ஒரு திருப்புமுனையாக அமைந்து, அவர் மீது இருந்த ‘வெறும் நடிகர்’ என்ற பிம்பத்தை உடைத்து ஒரு ‘தலைவர்’ என்ற அங்கீகாரத்தை வழங்கியது.
விஜய் தனது அரசியல் பயணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை ஒரு முன்னுதாரணமாக கொள்கிறார் என்பது அவரது அண்மைக்கால பேச்சுகளில் இருந்து தெளிவாகிறது. எம்.ஜி.ஆருக்கு திரைத்துறையில் இருந்த செல்வாக்கும், அவர் சந்தித்த ‘பவுடர் பூசியவர்’, ‘கோமாளி’ போன்ற விமர்சனங்களும் தமக்கும் ஏற்படுவதாக விஜய் உணர்கிறார். எம்.ஜி.ஆர் எப்படி பத்திரிகையாளர் சந்திப்புகளை தவிர்த்து நேரடியாக மக்களிடம் உரையாடி வெற்றி பெற்றாரோ, அதே பாணியை விஜய்யும் பின்பற்றுவதாக தெரிகிறது. “என்னை ட்ரோல் செய்யுங்கள், ஆனால் மக்கள் அமைதியாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்” என்ற விஜய்யின் நம்பிக்கை, எம்.ஜி.ஆரின் அரசியல் பாணியின் மறுவடிவமாகவே பார்க்கப்படுகிறது.
கருத்துக்கணிப்புகளை பொறுத்தவரை, இன்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரு புதிய கட்சிக்கு 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுவது சாதாரணமான விஷயம் அல்ல. இதனை விமர்சிப்பவர்களை ‘கடுப்புக்கணிப்பு’ என்று விஜய் கிண்டல் செய்தாலும், கள நிலவரம் அவருக்கு சாதகமாகவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, தி.மு.க-வை மட்டுமே தனது பிரதான அரசியல் எதிரியாக முன்னிறுத்தி, அதிமுக-வை ‘மற்றும் சிலர்’ என்று அவர் குறிப்பிட்டது, வரும் தேர்தலை ‘திமுக vs டிவிிகே’ என்ற நேர்கோட்டில் கொண்டு செல்லும் ஒரு தந்திரமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
கட்சியின் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், விஜய் மட்டுமே கட்சியின் ஒரே முகமாக இருப்பது ஒரு பலவீனமாக அமையுமோ என்ற அச்சம் நிலவுகிறது. மற்ற கட்சிகளில் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான ஆளுமைகள் இருக்கும் நிலையில், டிவிகேவில் விஜய் மட்டுமே அனைத்துமாக இருக்கிறார். 234 தொகுதிகளிலும் விஜய்யே நிற்பதாக கட்சியின் நிர்வாகிகள் கூறினாலும், களத்தில் வேட்பாளர்கள் மக்களிடம் எப்படி சென்றடைவார்கள் என்பது ஒரு சவாலான காரியம். வரும் பிப்ரவரி எட்டாம் தேதி வேலூரில் இருந்து தொடங்கவிருக்கும் அவரது அடுத்தகட்ட சுற்றுப்பயணம், இந்தச் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, சினிமா புகழை தாண்டி ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக விஜய் தன்னை நிலைநிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தற்போது அவர் பொதுவெளியில் ஆடும் நடனம் அல்லது பேசும் சில வசனங்கள் விமர்சனங்களுக்கு உள்ளானாலும், அது தொண்டர்களை உற்சாகப்படுத்தும் ஒரு தற்காலிக உத்தி மட்டுமே. வரும் இரண்டு மாதங்களில் அவர் பேசப்போகும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளும், அவர் அறிவிக்கப்போகும் தேர்தல் அறிக்கையும்தான் அவரது அரசியல் முதிர்ச்சியை தீர்மானிக்கும். தமிழக வெற்றிக் கழகம் வெறும் உணர்ச்சிப்பூர்வமான இயக்கமாக நீடிக்கப்போகிறதா அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆளுமையாக மாறப்போகிறதா என்பதை வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவு தெளிவுபடுத்தும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
