வீடு, மனை பத்திரப்பதிவில் ‘ஸ்டார் 3.0’.. தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ்

சென்னை: பத்திரங்களை, எந்த சார் – பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்வது விரைவில் மிகவும் எளிதாக போகிறது. “ஸ்டார் 3.0” சாப்ட்வேர் மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்தால், ஒரு பத்திரத்தை பதிவு செய்வதில், 95 சதவீத பணிகள் ஆன்லைன் முறைக்கு மாறிவிடும்.

தமிழ்நாட்டில் பத்திர ஆவணங்களை பதிவு செய்யும்போது, அது தொடர்பாக சிக்கல் இருந்தால் சார் பதிவாளர்கள் சரிபார்ப்பது கட்டாயம்.ஆனால், இதுபோன்ற ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும்போது, வேறு சார் பதிவாளர் அலுவலகத்தில் தடை எதுவும் உள்ளதா என்பதையும் டிஐஜி அலுவலகம் வாயிலாக சரிபார்க்க வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது. இதற்காகவே, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இடையே கடித போக்குவரத்து நடத்த, அதிக தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனை முறைப்படுத்தவே, ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான, “ஸ்டார் 2.0” சாப்ட்வேரில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில் புதிததாக ரூ.323.45 கோடி செலவில் ‘ஸ்டார் 3.0’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு அரசு வெளியிட்ட ஒரு அறிவிப்பில், “பதிவுத் துறையில் முன்னோடி திட்டமாக கடந்த 2000-ம் ஆண்டு பிப்.6-ம் தேதி முதல் ‘ஸ்டார்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டம் பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைந்து கணினிமயமாக்கலில் பதிவுத்துறையை முன்னோடி துறையாகத் திகழ வைத்துள்ளது. தற்போது அனைத்து சேவைகளும் இணையதள அமைப்பிலான ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் தற்போதுள்ள ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளில், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், பெருந்தரவு பகுப்பாய்வு முதலான மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உத்திகள் உட்புகுத்தப்படுகின்றன.

சான்றிட்ட நகல் மற்றும் வில்லங்க சான்றிதழ் முதலான சேவைகளை தானியங்கி முறையில் தன்னிச்சையாக தயாரித்தல் முதலான பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப திட்டங்களை செயல்படுத்தும் விதமாக ரூ.323.45 கோடி செலவில் ‘ஸ்டார் 3.0’ திட்டம் விரைவில் அறிமுகம் செய்வது குறித்து, கடந்த ஆண்டு ஜூலை 12-ல் தேதி (2023) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை கண்காணிக்க தலைமை செயலரின் தலைமையில் மாநில அளவிலான குழுவும்,செயல்படுத்துவதற்காக பதிவுத்துறை தலைவர் தலைமையில் திட்டசெயலாக்க குழுவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்துக்கென திட்ட ஒருங்கிணைப்பாளரை தேர்வுசெய்யவும் திட்ட ஆலோசகர்கள் இருவரை நியமிக்கவும், இத்திட்டத்தின் செயல்திறன், செயல்பாடு மற்றும் பாதுகாப்பு முதலானவற்றை தணிக்கை செய்ய மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்களை அடையாளம் காணவும் பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

முழுமையான வன்பொருள், மென்பொருள், பணியமைப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘ஸ்டார் 3.0’ திட்டமானது, பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எளிய, வெளிப்படையான பாதுகாப்பான மற்றும் துரிதமான மற்றும் உயர் தரத்திலான சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தமிழக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளில், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், பெருந்தரவு பகுப்பாய்வு முதலான மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உத்திகள் காரணமாக சொத்து பரிமாற்றம் தொடர்பான விபரங்கள் எளிதாகி உள்ளன. வில்லங்க சான்றிதழ்களையும் எளிதாக பெறக்கூடிய இந்த வசதிகளும் வந்ததுள்ளன..

இந்நிலையில அரசு அறிவித்த “ஸ்டார் 3.0” என்ற புதிய சாப்ட்வேர் தேவை தயாரிக்கும் பணிகள் விரைவில் முழுமையாக நடக்க போகிறது. இதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“கடந்த, 2023 – 24 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டபடி, “ஸ்டார் 3.0″ சாப்ட்வேர் தயாரிக்க, 323.45 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சாப்ட்வேர் தயாரிப்பதற்கான ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பதற்கான, டெண்டர் கோரும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன்மயம்: இந்த புதிய சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வந்தால், ஒரு பத்திரத்தை பதிவு செய்வதில், 95 சதவீத பணிகள் ஆன்லைன் முறைக்கு மாறி விடும்.. அதுமட்டுமல்ல, சார் – பதிவாளர் அலுவலகத்தில் தான் சொத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்றில்லாமல், எங்கிருந்தும், எந்த அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ள முடியும். அதேபோல் ஒரு நிமிடத்தில் உங்களுக்கு பட்டா கிடைத்துவிடும். மேலும் எந்த வகையான நிலத்திற்கு பட்டா கேட்கிறீர்கள் என்பதையும் எளிதாக அறிய முடியும். போலி பட்டாக்கள் வாங்குவது மிகவும் கடினம் என்கிறார்கள். ஏனெனில் தானியங்கி வில்லங்க சான்று வசதிகளுடன் ‘ஸ்டார் 3.0’ திட்டம் அறிமுகம் ஆவது தான் காரணம் ஆகும்.