100 நிறுவனங்கள் 300 கருத்துக்கணிப்பு சொல்லலாம்… ஆனா மக்கள் ஒரு முடிவு எடுத்துட்டா, அந்த முடிவு முன்னாடி எந்த உளவியல் போரும் ஜெயிக்காது! பிட்ச் ரிப்போர்ட் பார்த்து முடிவு சொல்றதுக்கு இது கிரிக்கெட் கிடையாது.. பல கோடி மக்களோட எமோஷன்! அதை கணிக்கிறதுக்கு கம்ப்யூட்டரால கூட முடியாது..

தமிழக தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட வெப்பத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் ஒருபுறம் அனல் பறக்க, மறுபுறம் பல்வேறு நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் வெளியாகி விவாதங்களை கிளப்பி வருகின்றன. பொதுவாக தேர்தல் நேரங்களில் வெளியாகும்…

voters

தமிழக தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட வெப்பத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் ஒருபுறம் அனல் பறக்க, மறுபுறம் பல்வேறு நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் வெளியாகி விவாதங்களை கிளப்பி வருகின்றன. பொதுவாக தேர்தல் நேரங்களில் வெளியாகும் இந்த கருத்துக்கணிப்புகளை ஒரு வகையான ‘உளவியல் போர்’ என்றே சொல்லலாம். ஒரு சாதாரண மனிதன் காலண்டரை கிழிக்கும்போது அன்றைய ராசிபலனை பார்த்துவிட்டு, “நல்லது போட்டிருந்தால் சரி, கெட்டது போட்டிருந்தால் இது எப்படி எல்லாருக்கும் நடக்கும்?” என்று கடந்து செல்வதை போலத்தான் பல நேரங்களில் இந்த கருத்துக்கணிப்புகளும் அமைகின்றன. ஒரு ராசியில் இருக்கும் பல கோடி பேருக்கும் ஒரே நாளில் நஷ்டம் வந்துவிடாது என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல சில ஆயிரம் பேரிடம் எடுக்கப்படும் கருத்துக்கணிப்பு ஒட்டுமொத்த மாநிலத்தின் தீர்ப்பாக இருக்க முடியாது.

இன்றைய காலகட்டத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே செய்த இந்த பணியை, இன்று சுமார் 300 முதல் 400 சிறிய நிறுவனங்கள் வரை செய்கின்றன. அரசியல் கட்சிகளே கூட வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், திரைமறைவில் இத்தகைய நிறுவனங்களை அணுகி தொகுதிகளின் நிலவரத்தை அறிந்து கொள்கின்றன. ஆனால், இந்த தரவுகள் எவ்வளவு தூரம் துல்லியமானவை என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

ஒரு தொகுதியில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் இருக்கும்போது, வெறும் சில நூறு அல்லது ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்து கேட்பது என்பது முறையான புள்ளிவிவர அணுகுமுறை கிடையாது. ஒரு முறையான சர்வே எடுக்க வேண்டுமானால் அதில் ஆண், பெண், ஏழை, பணக்காரர், கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்து தரப்பு மக்களும் சமமாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். இதற்கு பெரும் செலவும், கால அவகாசமும் தேவைப்படும். ஆனால், பல நிறுவனங்கள் நான்கே நாட்களில் முடிவுகளை அறிவிப்பது அதன் நம்பகத்தன்மை மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

அரசியல் கட்சிகளை பொறுத்தவரை, கருத்துக்கணிப்புகள் என்பது Icing on the cake போன்றதுதான். அதுவே வெற்றியின் அடிப்படை கிடையாது. ஏற்கனவே ஒரு கட்சிக்கு சாதகமான அலை இருக்கும்போது, இத்தகைய கணிப்புகள் அந்த அலையை இன்னும் சற்றே அதிகப்படுத்த உதவும். உதாரணமாக, கடந்த காலங்களில் சில நிறுவனங்கள் குறிப்பிட்ட மாநிலங்களில் ஒரு கட்சி வெற்றி பெறும் என்று கணித்ததற்கு மாறாக, முற்றிலும் வேறொரு கூட்டணி வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு. எனவே, மக்கள் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள் என்றால், ஆயிரம் கருத்துக்கணிப்புகள் வந்தாலும் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள போவதில்லை.

இருப்பினும், தேர்தலுக்கு முந்தைய கடைசி ஒரு வாரம் என்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, நடுநிலை வாக்காளர்கள் கடைசி நேரத்தில்தான் தங்கள் முடிவை எடுக்கிறார்கள். அந்த நேரத்தில் கட்சிகள் முன்னெடுக்கும் Door-to-door பிரச்சாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுக்கூட்டங்கள் மற்றும் வாகன பிரச்சாரங்களுக்கு மக்கள் தேடி வர வேண்டும், ஆனால் கடைசி இரண்டு நாட்களில் வேட்பாளர்களும் கட்சியினரும் மக்களை தேடி செல்கிறார்கள். “நான்தான் கிங்” என்று வாக்காளன் உணரும் அந்த தருணமே பல நேரங்களில் வெற்றியை தீர்மானிக்கிறது.

இன்றைய அரசியல் தலைவர்கள் டீக்கடைகளுக்கு செல்வது, மக்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்ற புதிய உத்திகளை கையாள்கின்றனர். இது ஒரு வகையான Accessibility பிம்பத்தை உருவாக்க முயல்கிறது. அதாவது, தலைவர்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை இது தருகிறது.

புதுச்சேரி போன்ற சிறிய மாநிலங்களில் இது இயல்பான ஒன்றாக இருக்கலாம், ஆனால் பெரிய மாநிலங்களில் இது தேர்தல் நேரத்து யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. மக்கள் இதையெல்லாம் கவனிக்க தவறுவதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் நெருக்கமாக வந்துவிட்டு, மற்ற நேரங்களில் தூரமாக இருப்பவர்களை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள். இறுதியில், களப்பணியும் மக்களின் மீதான உண்மையான அக்கறையுமே நிலையான வெற்றியை தேடித்தரும்.