தமிழக அரசியல் வரலாற்றை தற்போதைய சூழலில் ‘தமிழக வெற்றிக் கழகத்திற்கு முன்’ மற்றும் ‘தமிழக வெற்றிக் கழகத்திற்கு பின்’ என இரண்டு தெளிவான காலகட்டங்களாக பிரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தவெகவின் வருகைக்கு முந்தைய அரசியலில், ஒரு கட்சியின் வெற்றி என்பது அதன் கூட்டணி பலம் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகங்களின் சமூகத்தின் வாக்கு சதவீதம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்து இருந்தது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வந்த இருமுனை போட்டி, கூட்டணி கணக்குகளைச் சுற்றியே சுழன்றது. ஆனால், நடிகர் விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த பிறகு, இந்த மரபுவழி அரசியலின் அஸ்திவாரம் ஆட்டம் காண தொடங்கியுள்ளது.
தவெகவுக்கு முந்தைய காலத்தில், தேர்தல் வியூகங்கள் என்பது பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து, அதன் மூலம் தங்களது வாக்கு சதவீதத்தை 40 சதவீதத்திற்கும் மேலாக தக்கவைப்பதாகவே இருந்தது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களும் தங்களது கூட்டணி கட்சிகளின் பலத்தை வைத்து தொகுதிகளை பங்கிட்டு, வெற்றியை தீர்மானித்தன. ஆனால், தவெகவின் வருகைக்கு பின், இந்த வாக்கு சதவீதம் என்பது முற்றிலுமாக சிதறடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவு தவெக பக்கம் திரும்புவதால், பாரம்பரிய கட்சிகள் வைத்திருந்த வாக்கு வங்கி மட்டுமின்றி சிறிய கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
தற்போது நிலவும் சூழலில், பழைய கூட்டணி கணக்குகள் அனைத்தும் செல்லாததாகி போய்விட்டன. இதற்கு முன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை குத்தகைக்கு எடுத்திருந்த கட்சிகளால், இப்போது அதே உறுதியுடன் செயல்பட முடிவதில்லை. இத்தகைய சூழலில், வாக்குகள் பலமுனை போட்டிகளால் சிதறும்போது, பெரிய கூட்டணிகளை விட தனிப்பட்ட செல்வாக்கும் புதிய மாற்றத்தை விரும்பும் மக்களின் எண்ணமுமே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளன.
தவெகவுக்கு பின்னான அரசியலில், ‘மிரட்டல் அரசியல்’ என்பதும் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. தவெக கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகள் மீது மத்திய விசாரணை அமைப்புகளின் அழுத்தம் ஏவப்படுவதாக சொல்லப்படும் புகார்கள், தேர்தல் களத்தில் நிலவும் பதற்றத்தை காட்டுகின்றன. ஆனாலும், விஜய் தனது கூட்டணி கதவுகளைக் காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகளுக்காக மட்டுமே திறந்து வைப்பார் என்ற கணிப்புகள் வலுவாக உள்ளன. மற்ற கட்சிகள் தவெகவை நோக்கி வர துடித்தாலும், தனது கொள்கை ரீதியான பாதையில் சமரசம் செய்துகொள்ள விஜய் தயாராக இல்லை என்பது, தமிழக அரசியலில் ஒரு புதிய ‘தூய்மைவாத’ அலை உருவாவதை உணர்த்துகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், 2026 சட்டமன்ற தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, அது தமிழக அரசியலின் இலக்கணத்தையே மாற்றியமைக்கும் ஒரு போராக அமையும். வாக்கு சதவீத சிதைவு மற்றும் கூட்டணி குழப்பங்களுக்கு மத்தியில், தவெக ஒரு மாற்று சக்தியாக நிலைபெறுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஒருபுறம் மெகா கூட்டணியுடன் நிற்கும் அதிமுக, மறுபுறம் பிளவுகளை சந்திக்கும் திமுக, இவற்றுக்கு இடையே தனித்துவமான வியூகத்துடன் களம் காணும் தவெக என தமிழக அரசியல் ஒரு புதிய வரலாற்று பக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
