நோபல் பரிசை டிரம்ப் வாங்கியது செல்லுமா? பதக்கம் மச்சாடோவோடது… ஆனா அது இப்ப இருக்குற இடம் டிரம்பின் வெள்ளை மாளிகை.. நோபல் கமிட்டிக்கு அது வெறும் மெடல்… மச்சாடோவுக்கு அது ஒரு போராட்டத்தோட ரிசல்ட்… ஆனா ட்ரம்புக்கு அது தனது வாழ்நாள் கனவு.. பட்டத்தை வேணும்னா டிரம்ப் பேப்பர்ல வச்சுக்கலாம்.. ஆனால் ரூல்ஸ் படி பார்த்தா பட்டம் மச்சாடோவுக்கு மட்டுமே சொந்தம்..

2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி, அமெரிக்க அரசியலிலும் சர்வதேச விவகாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு வெள்ளை மாளிகையில் அரங்கேறியது. வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா…

trump nobel

2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி, அமெரிக்க அரசியலிலும் சர்வதேச விவகாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு வெள்ளை மாளிகையில் அரங்கேறியது. வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதி பரிசு பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் நேரில் வழங்கினார். ஜனவரி 3, 2026 அன்று அமெரிக்கப் படைகளால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பிடிபட்டதை தொடர்ந்து, அந்த நாட்டின் ஜனநாயக மீட்பிற்காக ட்ரம்ப் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் விதமாக மச்சாடோ இந்த முடிவை எடுத்தார். ஒரு நாட்டின் உயரிய கௌரவமாக கருதப்படும் நோபல் பரிசை மற்றொருவருக்கு தானமாக வழங்க முடியுமா என்ற விவாதத்தை இந்த செயல் உலக அரங்கில் தற்பொழுது கிளப்பியுள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் பேசிய மச்சாடோ, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார். அன்று தளபதி லாஃபாயெட், வெனிசுலாவின் விடுதலை வீரர் சைமன் பொலிவருக்கு ஜார்ஜ் வாஷிங்டனின் முகம் பொறிக்கப்பட்ட ஒரு பதக்கத்தை வழங்கியதாகவும், பொலிவர் தனது வாழ்நாள் முழுவதும் அதைப் போற்றி பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த பதக்கம் அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான சகோதரத்துவத்தின் அடையாளமாக விளங்கியதை சுட்டிக்காட்டிய மச்சாடோ, தற்பொழுது 200 ஆண்டுகள் கழித்து வாஷிங்டனின் வாரிசாக தான் கருதும் அதிபர் ட்ரம்பிடம், வெனிசுலா மக்களின் சார்பில் இந்த நோபல் பதக்கத்தை திருப்பி அளிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட போராடியதற்காக மச்சாடோவிற்கு 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் நோபல் அமைதி பரிசு அறிவிக்கப்பட்டது. அப்பொழுதே அவர் இந்த பரிசை ட்ரம்பிற்கு அர்ப்பணிப்பதாக கூறியிருந்தார். பல ஆண்டுகளாக நோபல் பரிசை பெற வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படையாகக் கூறி வந்த ட்ரம்ப், மச்சாடோவிடமிருந்து பதக்கத்தை பெற்றுக்கொண்ட பின், இது ஒரு அற்புதமான மற்றும் பரஸ்பர மரியாதை கொண்ட செயல் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். தற்போது அந்தப் பதக்கம் வெள்ளை மாளிகையில் ட்ரம்பின் வசம் உள்ளது. இருப்பினும், இந்த பரிமாற்றம் சட்டப்பூர்வமாக செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து நார்வேஜியன் நோபல் குழு மிகவும் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. நோபல் பரிசு என்பது ஒருமுறை அறிவிக்கப்பட்டால் அதை திரும்ப பெறவோ, மாற்றவோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்பது விதியாகும். ஒரு நபர் தனக்கு கிடைத்த பதக்கத்தை மற்றவருக்கு வழங்கலாம் அல்லது விற்கலாம்; உதாரணமாக, ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் உக்ரைன் அகதிகளுக்காக தனது பதக்கத்தை ஏலத்தில் விற்றதை இங்கு உதாரணமாக கொள்ளலாம். ஆனால், ‘நோபல் பரிசு வெற்றியாளர்’ என்ற அந்தஸ்தும் பட்டமும் எப்போதும் அந்த பரிசை முதலில் வென்றவருக்கே உரியது. அது ஒருபோதும் மற்றொருவருக்கு மாற்றப்பட மாட்டாது.

எனவே, மச்சாடோ வழங்கிய பதக்கம் தற்பொழுது ட்ரம்ப் வசம் இருந்தாலும், அவர் ஒரு நோபல் வெற்றியாளராக அங்கீகரிக்கப்பட மாட்டார். நோபல் குழுவின் பதிவுகளில் 2025 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளராக மச்சாடோவின் பெயரே நிலைத்திருக்கும். மச்சாடோ ஒரு தனிநபராக தனது சொத்தான பதக்கத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை பெற்றவர் என்றாலும், அந்த பதக்கத்துடன் வரும் அதிகாரப்பூர்வ கௌரவத்தை ட்ரம்பால் உரிமை கோர முடியாது. ஒரு வரலாற்று பொருளாக மட்டுமே அந்த பதக்கம் ட்ரம்பிடம் இருக்கும் என்பதை நோபல் அமைதி மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் ஒரு வினோதமான சூழலை உருவாக்கியுள்ளது. ஒருபுறம் வெனிசுலாவின் விடுதலைக்காக அமெரிக்கா செய்த உதவியை பாராட்டும் ஒரு உணர்ச்சிகரமான செயலாக இது பார்க்கப்பட்டாலும், மறுபுறம் நோபல் பரிசின் மரபுகள் மற்றும் விதிகளின்படி இது ஒரு தற்காலிக உரிமையாளர் மாற்றமாகவே கருதப்படுகிறது. மச்சாடோ தனது போராட்டத்தின் அடையாளத்தை தியாகம் செய்துள்ளார், ட்ரம்ப் தான் நீண்டகாலமாக விரும்பிய ஒரு பதக்கத்தை சொந்தமாக்கி கொண்டுள்ளார். ஆனால், அதிகாரப்பூர்வமான நோபல் வெற்றியாளர் என்ற பட்டம் மட்டும் இன்னமும் ட்ரம்பிற்கு எட்டா கனியாகவே நீடிக்கிறது.