காதலை வளர்த்த அரசு பஸ்.. கல்யாண கோலத்தில் இளம் ஜோடி செய்த சூப்பர் செயல்

திருவனந்தபுரம்: காதல் வளர காரணமாக இருந்த அரசு பஸ்சில் திருமண கோலத்தில் இளம்ஜோடி பயணம் செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள மாறநல்லூர் சீனிவிளை பகுதியை சேர்ந்த நித்யானந்தன்-கீதாமணி தம்பதி மகன்…

The government bus that fostered love: A super act done by a young couple in a wedding dress

திருவனந்தபுரம்: காதல் வளர காரணமாக இருந்த அரசு பஸ்சில் திருமண கோலத்தில் இளம்ஜோடி பயணம் செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள மாறநல்லூர் சீனிவிளை பகுதியை சேர்ந்த நித்யானந்தன்-கீதாமணி தம்பதி மகன் அமல் (வயது 31). இவருடைய ஊருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பஸ் வசதி கிடையாது. அப்போது மாணவ பருவத்தில் இருந்த அமல், தனது ஊர் வழியாக அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். அனால் அவரது மனு நீண்ட நாட்களாக ஏற்கப்படவில்லை. எனினும் அமல் தனது முயற்சியை கைவிடவில்லை. எப்படியாவது தனது ஊர் வழியாக பஸ்சை இயக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்

தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்ததின் பயனாக அவரது ஊருக்கு பஸ் போக்குவரத்து வசதியை அரசு ஏற்படுத்தி கொடுத்தது. அதாவது அனப்பாடு-சீனிவிளை வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால் சீனிவிளை மக்களின் நீண்ட நாள் கனவு அமல் என்ற இளைஞரின் முயற்சியால் நிறைவேறியது. இந்த பேருந்தில் தான் கல்லூரிக்கு செல்வதற்காக அமல் தொடர்ந்து பயணம் செய்தார்.

அப்போது முதன் முதலாக அபிஜிதா என்பவரை அதே பஸ்சில் பார்த்தார். அவரை பார்த்தவுடன் அமலுக்கு பிடித்து விட்டது. பயணத்தின் போது இருவரும் அடிக்கடி சந்தித்ததால் அவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டது. பின்பு அது காதலாக மாறியது.

இந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்த அமலுக்கு வெளியூரில் வேலை கிடைத்தது. வேலைக்கும் அதே பஸ்சிலேயே பயணித்தார். ஒருகட்டத்தில் காதலில் உறுதியாக இருந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைய முடிவு செய்தார்கள். அவர்களது காதலுக்கு பெற்றோரும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்கள்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் நெய்யாற்றின் கரையை அடுத்த செங்கல் மகாதேவர் கோவில் சன்னதியில் வைத்து திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு தங்களுக்கு அடைக்கலம் தந்து இருவருக்குமிடையே காதல் உருவாக காரணமாக இருந்த அரசு போக்குவரத்து கழக பஸ்சில் திருமண கோலத்தில் பயணிக்க இருவரும் ஆசைப்பட்டுள்ளனர். அதன்படி இருவரும் கழுத்தில் மாலையுடன் பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். அங்குஅரசு பஸ்சின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் காதலித்த போது தாங்கள் பயணித்ததை போன்று, பஸ்சுக்குள் அமர்ந்து பேசியபடி பயணித்தனர். புதுமண ஜோடியின் இந்த செயல் சீனிவிளை பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து அமல் கூறும் போது, இந்த பஸ் எனது வாழ்க்கையில் நிலையான ஒன்று. நான் நினைத்து பார்க்காத வழிகளில் எனது வாழ்க்கை பயணத்தை வடிவமைத்து தந்தது என்று கூறியுள்ளார்.