இந்தியாவின் முதல் ஆப்பிள் சில்லறை விற்பனை நிலையம் மும்பையில் இன்று தொடங்கப்பட்டதை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்பதை தெரிந்தது. குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குவதற்கு பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்பிள் தயாரிப்புகளை இதுவரை ஆன்லைன் மற்றும் பிற கடைகளில் மட்டும் வாங்கி வந்த நிலையில் முதல் முறையாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்தியேக ஷோரூம் இன்று மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 20ஆம் தேதி டெல்லியில் இரண்டாவது ஷோரூம் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் இன்று திறக்கப்பட்ட முதல் ஷோரூமை ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டீம் குக் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், நடிகை ரவீனா டண்டன், நேஹா தூபியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
தற்போது மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஷோரூம் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்த கட்டமாக சென்னை, பெங்களூர், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இந்தியாவில் பல ஆப்பிள் ஷோரூம்கள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இனிமேல் ஆப்பிள் ஐபோன் ரசிகர்கள் ஆப்பிள் ஐபோன்களை இந்தியாவில் உள்ள பிரத்யேக ஷோரூமில் வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.