நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படமாக சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படம் அமைந்திருந்தது. இந்த திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பை மக்கள் மாத்தியில் பெற்று வரும் நிலையில் தமிழ் சினிமாவிலும் வசூல் ரீதியாக மிகவும் பல முக்கியமான சாதனைகளையும் படைத்து வருகிறது. கோட் திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வந்த சமயத்தில்தான் நடிகர் விஜய் திடீரென அரசியலுக்குள் நுழைவது குறித்தும் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி அதன் கொடியையும் அறிமுகப்படுத்தி இருந்தார் விஜய். இதனால் கோட் தவிர ஒரே ஒரு படத்துடன் விஜய் திரை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். இதன் காரணமாக விஜய் படம் பற்றி எந்த அப்டேட் வந்தாலும் அதனை பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்றும் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். அப்படி ஒரு சூழலில் கோட் படத்தின் ரிலீஸையும் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி இருந்தனர்.
இதனிடையே விஜய்யின் 69 வது மற்றும் கடைசி திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனம் தமிழில் தங்களின் முதல் திரைப்படமாக, விஜயின் கடைசி படத்தையும் தயாரிப்பதும் உறுதியானது. அப்படி ஒரு சூழலில் தளபதி 69 படத்தின் அறிவிப்பிற்கு முன்பாக விஜய்யின் கடைசி படம் என்ற எமோஷனல் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது ரசிகர்களை கண்கலங்க வைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். மேலும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம், விஜய்யின் 69 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரமும் விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் கூறுகின்றது.
இது தொடர்பாக வெளியான போஸ்டர் ஒன்றில் கையில் தீப்பந்தத்துடன் ஒருவர் இருப்பது போன்றும் அருகே, “The Torch Bearer Of Democracy” என்று வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் எச். வினோத் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இணைவதாக அறிவிக்கப்பட்ட வீடியோ ஒன்றிலும் இதேபோன்று தீப்பந்தம் கையில் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
#KH233 என அறிவிக்கப்பட்ட கமல்ஹாசனின் திரைப்படத்தை எச் வினோத் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்து வரும் நிலையில் விஜய் படத்தை அவர் தற்போது இயக்க உள்ளார். இரண்டு போஸ்டர்களும் ஒரே போல இருப்பதால், ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பதாக இருந்த படத்தின் கதையில் தான் தற்போது விஜய் நடிக்க இருப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.