பொதுவாக, வருமானம் செய்யும் நபர் கண்டிப்பாக தனது குடும்பத்தின் பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் எடுப்பது வழக்கம். ஆனால், அந்த இன்சூரன்ஸ் பங்குச்சந்தை சார்ந்த மணி பேக் போன்ற இன்சூரன்ஸ் ஆக இல்லாமல், முழுவதுமாக நமது காலத்திற்கு பிறகு குடும்பத்திற்கு பயன்படும் வகையில் டேர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே எடுக்க வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால், அதே நேரத்தில் டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதிலும் சில கால்குலேஷன் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவர் ஆண்டு சம்பளம் எவ்வளவோ, அந்த வருமானத்திற்கு 15 மடங்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் மாத வருமானம் செய்கிறார் என்றால், அவரது வருட வருமானம் 6 லட்சம் ரூபாய். அந்த 6 லட்சத்தில் 15 மடங்கு என்பது 90 லட்சம். அதாவது, கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அதே நேரத்தில், மாதம் 10,000, 20000 ரூபாய் வருமானம் உள்ளவர்களும் அதே ஒரு கோடி ரூபாய்க்கு தான் இன்சூரன்ஸ் எடுத்தால், பாலிசித்தொகை கட்டுவதில் சிக்கல் ஏற்படும்.
மேலும், இளம் வயதிலேயே டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது நல்லது. இளம் வயதில் ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்தால், வருடத்திற்கு 15,000 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டிய நிலை வரும். அதே, கொஞ்சம் வயதாக ஆக ஆக இந்த தொகை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டேர்ம் இன்சூரன்ஸ் மட்டும் இல்லாமல் தனி நபர் விபத்து காப்பீடும் அவசியம். இந்த இரண்டையும் இளம் வயதில் எடுத்தால், கிட்டத்தட்ட வருடத்திற்கு 16,500 பாலிசித்தொகை ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வதால், நமது குடும்பம் பொருளாதார ரீதியில் பாதுகாப்புடன் இருக்கும் என்பதையும் அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.