தவெக-வின் முதல் மாநில மாநாடு.. தொண்டர்களுக்கு என்னென்ன ரூல்ஸ் தெரியுமா?

By John A

Published:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கிராமத்தில் வருகிற அக்டோபர் 27 அன்று நடைபெறும் என கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தார். இதனையொட்டி அரசியல் களத்தில் நடைபெறப் போகும் இந்த புதிய விளையாட்டைக் காண தமிழகமே காத்திருக்கிறது.

மாநாட்டிற்காக முதலில் பார்த்த இடம் அனுமதி கிடைக்காததால் தற்போது உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மாநாட்டிற்கு காவல் துறை தரப்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டதால் அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 27-ல் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக சுமார் 151 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் தயாராக உள்ளது. மேலும் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் கட்சித் தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அதில்

மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக மது அருந்தி விட்டு வரக்கூடாது.
பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்யக் கூடாது.
அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் ஈடுபடக் கூடாது.
கிணறு மற்றும் ஆபத்தான பகுதிகள் இருந்தால் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
மருத்துவக்குழு மற்றும் தீயணைப்புக் குழுவினருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
பேருந்து மற்றும் வேன்களில் தகுந்த எண்ணிக்கையில் மட்டுமே தொண்டர்களை அமர வைக்க வேண்டும்.

போன்ற அறிவுரைகளை புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு வழங்கியிருக்கிறார். மேலும் மாநாட்டிற்கான வி.ஐ.பி-க்கள் பாதை, பொதுமக்களுக்கு வசதிகள், நில உரிமையாளர் அனுமதி, வாகனப் போக்குவரத்து, மின்சாரம், தீயணைப்பு போன்ற அனைத்து அனுமதிகளும் ஒவ்வொன்றாகப் பெறப்பட்டு வருகிறது.