சிவப்பு என்றால் புரட்சியின் நிறம், அதனால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது. அதனால் சிவப்பு நிறத்தை எங்கள் கட்சிக்காக தேர்வு செய்தோம். மஞ்சள் நிறமோ நம்பிக்கையின் பிரதிபலிப்பு; இலக்கை நோக்கி உற்சாகத்துடன் பாயும் எண்ணத்தை தூண்டும் நிறம். எனவே, இந்த இரண்டு நிறங்களும் எங்கள் கொடிக்கு பொருத்தமானவை எனக் கருதி தேர்வு செய்யப்பட்டது.
வாகை மலர் என்பது வெற்றியின் அடையாளம். போரில் வெற்றி பெற்று, மன்னன் திரும்பும் போது ‘வாகை சூடி வந்தான்’ என்று சொல்வார்கள். அதனால் வெற்றியைப் பிரதிபலிக்க வாகை மலரை எங்கள் கட்சிக்கான அடையாளமாகக் கொண்டோம்.
பலத்தைச் சொல்ல வரும் போது யானையின் பலம் என்றும் கூறுவர். அதன் தனித்தன்மையான உருவம், உயரம், மனோபலம் எல்லாம் அதனுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, போர் யானை என்பது ஒருவித தன்னிகரற்ற ஆற்றல் கொண்டது. போர்க்களத்தில் எளிதில் வெற்றியைப் பெற வல்லமை கொண்ட, தன்னம்பிக்கையோடு நிற்கும் இரட்டை யானை உருவம் எங்கள் கொடியில் இடம் பெற்றுள்ளது.
இதனூடாக எங்கள் கட்சியின் உற்சாகம், ஆற்றல், வெற்றியின் மீது நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகும்,” என்று விஜய் தனது கட்சியின் கொடியில் உள்ள நிறங்கள், வாகை மலர் மற்றும் யானை குறித்த விளக்கத்தை தெரிவித்துள்ளார்.