100 கோடி செலவில் சென்னையில் அமையப் போகும் பிரம்மாண்டம்.. நந்தவனமாகப் போகும் ஈசிஆர் சாலை

By John A

Published:

சென்னையில் வங்கக் கடலை ஒட்டியுள்ள கிழக்குக் கடற்கரை சாலை எப்போதும் பிஸியாகவே காணப்படும் ஓர் சாலையாகும். இந்தச் சாலைதான் மகாபலிபுரம், கோவளம் கடற்கரை, புதுச்சேரி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் முக்கியப் பாதையாக உள்ளது. மேலும் விரிவடைந்து வரும் சென்னை மாநகரத்தில் தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலை முக்கியத்துவம் பெற்றும் வருகிறது. திருவான்மியூர், நீலாங்கரை, பனையூர் போன்ற பகுதிகளில் மக்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டனர். மேலும் ஏராளமான நட்சத்திர விடுதிகளும் இப்பகுதியில் தான் உள்ளது.

தற்போது இந்தச் சாலையில் தான் தமிழக அரசின் மெகா திட்டம் ஒன்று செயல்பாட்டிற்கு வர உள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ரூ. 100 கோடி செலவில் 223 ஏக்கர் பரப்பளவில் நந்தவனம் பாரம்பரிய பூங்காவினை தமிழக அரசு நிறுவ உள்ளது. கோவளம் கடற்கரையை அடுத்து அமைய உள்ள இந்தப் பூங்காவில் நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் அமைய உள்ளது.

2 நட்சத்திர விடுதிகள், சுமார் 4,000 வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி, சமூக நிகழ்வுகளை நடத்துவதற்கான அரங்கங்கள், நடைபாதைகள், படகு சவாரி, திறந்தவெளி திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைய உள்ளது. சோலைவனம், விஹாரம், மைதானம் என்ற மூன்று பிரிவுகளாக அமைய உள்ள இந்தப் பூங்காவின் மூலம் கிட்டத்தட்ட சுமார் 10,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு உருவாகும்.

இந்த மாதிரி பூஜை அறையை வச்சுப் பாருங்க.. தெய்வம் நிரந்தரமாக வீட்டிலேயே குடிகொள்ளும்..

இதுமட்டுமன்றி தமிழகம் தற்போது விளையாட்டுத் துறையில் அடுத்தடுத்து பல சாதனைகளைப் புரிந்தும், உலக அளவில் விளையாட்டுத் தொடர்களை நடத்தி சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருவதாலும் இப்பூங்காவில் வாலிபால், டென்னிஸ், இ-விளையாட்டுகள் உள்ளிட்டவைக்கான கட்டமைப்பு வசதிகளும் அமைய உள்ளது. இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளது.

இப்பூங்கா செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மிகச்சிறந்த துணைப் பொழுதுபோக்கு மையமாக செயல்படும். மேலும் சுற்றுலாப் பயணிகளையும் அதிக அளவில் ஈர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை.