தமிழ்நாடு அரசு பெற்ற இரண்டு சூப்பர் விருதுகள்.. அப்படி என்னென்ன தெரியுமா?

By John A

Published:

தமிழ்நாடு அரசு மக்களுக்காக எண்ணற்ற பல நலத் திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாகச் செயலாற்றி வருகிறது. நமது மாநிலத்தின் திட்டங்களை வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கடைப்பிடிப்பதே இத்திட்டங்களின் மிகப்பெரிய வெற்றியாக உள்ளது. அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா. விருது கிடைத்துள்ளது. மேலும் இந்திய அளவில் மாநில உணவுத் தர குறியீட்டிற்கான செயல்பாட்டில் இரண்டாவது இடமும் பெற்றுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான “United Nation Interagency Task Force Award” விருது மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் சார்பில் உணவு பாதுகாப்பு துறையில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாவது இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட விருது, ஆகிய இரண்டு விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இனி நேரா பம்பையில் போய் இறங்கலாம்.. கேரள அரசின் வாவ் அறிவிப்பு..

பெருகி வரும் தொற்றா நோய்களின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக “மக்களைத் தேடி மருத்துவம்” எனும் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, 45 வயதிற்கு மேற்பட்ட மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு தொற்றா நோய்க்கான மருந்து பெட்டகம் வழங்குதல், இயன்முறை சிகிச்சை சேவை, நோய் ஆதரவு சிகிச்சை, CAPD டயாலிஸிஸ் பேக் வழங்குதல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து 7.11.2024 வரை மாநில அளவில் 1,98,25,487 பயனாளிகள் முதன் முறை சேவைகளையும் 4,22,79,337 பயனாளிகள் தொடர்சேவைகளையும் பெற்று வருகின்றனர். இந்நிலையில் 25 செப்டம்பர் 2024 அன்று நியூயார்க்கில் நடந்த 79-வது ஐ.நா.பொது சபையின் லெவன்த் பிரண்ட்ஸ் ஆப் தி டாஸ்க் போர்ஸ் கூட்டத்தில் 2024-க்கான டாஸ்க் போர்ஸ் விருதுகள் (Task Force Awards 2024) அறிவிக்கப்பட்டது.

புதுமை மற்றும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தல் உட்பட தொற்றாநோய்கள் மற்றும் மனநலம் தொடர்பான சிறந்த பணிகளை அங்கீகரிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் கொள்கை மற்றும் தர நிலையுடன் இணைந்து திறனுதவித் தொழில் நுட்பவியல் (assistive technology) பணியின் முக்கியத்துவத்தினை அங்கீகரிக்க இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதில் சுகாதார அமைச்சகங்கள் அல்லது சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனம் என்ற பிரிவின் கீழ் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது.