மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு தமிழக அரசியலையே குலுக்கும் என்றும், 500 ஏக்கரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த மாநாடு, விக்கிரவாண்டி மாநாட்டை விட இரு மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை என்பது தமிழக அரசியலுக்கு மிகவும் நெருக்கமான ஒரு தொகுதி. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததும், கமலஹாசன் கட்சி ஆரம்பித்ததும் மதுரைதான். எனவே, “மதுரை மண் மனம் மிக்கது. அங்குள்ள மக்கள் பாசமாக இருப்பார்கள், உறவுக்காக உயிர் கொடுப்பார்கள், ஒருவரை நம்பிவிட்டால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சென்னை போன்ற நகரங்கள் நாளடைவில் மாறிவிட்டது. ஆனால், மதுரை இன்னும் பழமை மாறாமல், அந்த மண்ணின் மக்களும் குணத்தில் மாறாமல் இருக்கிறார்கள். எனவே, மதுரை மண் நிச்சயம் தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும்” என்று தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்த் அவர்களின் சொந்த மண் மதுரை. விஜயகாந்த் அவர்கள் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு மிகப்பெரிய ஆளுமைகள் இருந்ததால் அவரால் தன்னுடைய இலக்கை எட்ட முடியவில்லை. “அன்று விஜயகாந்த் விட்ட பணியைத்தான் தற்போது விஜய் தொடர்கிறார். தற்போது ஆளுமை மிக்க தலைவர்கள் இரண்டு திராவிட கட்சிகளிலும் இல்லை என்ற நிலையில், அந்த வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பத்தான் விஜய் வருகிறார்” என்று தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், மதுரையில் நடைபெறும் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும், அந்த மாநாட்டிற்கு பிறகு தமிழக அரசியல் கட்சிகள் ஆச்சரியமடைவார்கள் என்றும், பல கட்சிகள் அந்த மாநாட்டிற்கு பிறகு விஜய்யிடம் கூட்டணி சேர வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாநாடு தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு திருப்புமுனையைத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
