2000 ரூபாய் நோட்டை இனி வாங்க வேண்டாம்.. தமிழக அரசின் அறிவிப்பால் பரபரப்பு..!

By Bala Siva

Published:

2000 ரூபாய் நோட்டை இனி வாங்க வேண்டாம் என தமிழக அரசின் போக்குவரத்து துறை நடத்துனர்களுக்கு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் 19 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் நாளாக நாளாக புழக்கம் குறைந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் 2000 ரூபாய் நோட்டு ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கையில் இல்லாமல் இருந்தது என்பதும் பணக்காரர்கள் மத்தியில் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென கடந்த மே மாதம் 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாகவும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

வங்கிகளில் ரூ.2000 நோட்டை கொடுத்து வேறு நோட்டுகளாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகள் செய்ய 2000 நோட்டை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் பேருந்துகள், ரயில் நிலையங்களிலும் 2000 ரூபாய் நோட்டு வாங்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் வாங்கப்படும் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் செப்டம்பர் 30ம் தேதிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் தமிழக அரசின் போக்குவரத்து துறை இனி பொது மக்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு அறிவித்துள்ளது. இனிமேல் வாங்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியாது என்பதால் இன்று முதல் பொதுமக்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே இதுவரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் கையில் வைத்திருந்தால் உடனடியாக வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டு விஷயத்தில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 93 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்து விட்டதாக அறிவித்திருந்தது. மீதமுள்ள 7 சதவீத 2000 நோட்டுகளும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் திரும்ப வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அரசு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.

Tags: Rs.2000