தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவருவேன் என்ற முழக்கத்துடன் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி, 2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கி களம் கண்டுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை ஒருபுறம் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை உற்றுநோக்கும் நடுநிலையாளர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்களிடையே ஒருவிதமான ஆழ்ந்த விரக்தியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் புரையோடி போயிருக்கும் ஊழல் மற்றும் பண பலத்தை ஒரு புதுக்கட்சியால் வெல்ல முடியுமா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் பல பயனர்கள், “விஜய்யால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது” என்று மிக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் முதன்மையான காரணம், தமிழக தேர்தல்களில் விளையாடும் ‘பண நாயகம்’. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நேரத்தில் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள் தண்ணீராக பணத்தை செலவழித்து, வாக்காளர்களின் மனநிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடுவார்கள் என்றும், இந்த விஸ்வரூப பண பலத்திற்கு முன்னால் விஜய்யின் கொள்கைகள் எடுபடாமல் போகலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
“பணம் பாதாளம் வரை பாயும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, கடைசி நேர பண விநியோகம் என்பது தமிழக தேர்தல்களின் டிரண்டையே மாற்றிவிடும் வல்லமை கொண்டது என்பது பலரது கருத்தாக உள்ளது. கடந்த கால தேர்தல்களில் சுயேச்சையாகவோ அல்லது மாற்று சக்தியாகவோ களம் கண்ட பல வேட்பாளர்கள், வாக்குப்பதிவுக்கு முந்தைய இரவு வரை முன்னிலையில் இருந்துவிட்டு, பண விநியோகத்திற்கு பிறகு படுதோல்வியை சந்தித்த நிகழ்வுகளை சுட்டிக்காட்டி சமூக வலைதள பயனர்கள் தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து வருகின்றனர். விஜய்யின் தவெக வேட்பாளர்கள் கூட, பெரிய கட்சிகளின் பண ஆசைக்கு இணங்கி கடைசி நேரத்தில் விலை போகலாம் என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் ஊழல் என்பது வெறும் அரசியல்வாதிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை; அது கீழிருந்து மேல் வரை ஒரு சங்கிலி தொடராகப் படர்ந்து, சமூகத்தில் ஒரு சர்வசாதாரணமான விஷயமாகிவிட்டது என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் காணப்படுகின்றன. “மக்களும் ஊழலை பழகிவிட்டனர், காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பதில் அவர்களுக்கு இப்போது எந்த குற்ற உணர்வும் இல்லை” என்ற கசப்பான உண்மையை சில பயனர்கள் முன்வைக்கின்றனர். ஒரு நேர்மையான அரசியல் மாற்றத்தை மக்கள் உண்மையில் விரும்புகிறார்களா அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் ‘விலையில்லா பொருட்களையும்’, ‘பணத்தையும்’ எதிர்பார்த்து காத்திருக்கிறார்களா என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்த சூழலில், தமிழகத்தில் எந்த ஜென்மத்திலும் ஒரு உண்மையான அரசியல் மாற்றம் வராது என்ற முடிவுக்கு பலர் வந்துவிட்டனர். திராவிட கட்சிகளின் வலுவான வாக்கு வங்கி, சாதிய கட்டமைப்பு மற்றும் தேர்தல் நேரத்தில் கையாளப்படும் உத்திகள் ஆகியவற்றை தாண்டி ஒரு புதிய சக்தி உருவெடுப்பது என்பது இமயமலையை தகர்ப்பதற்கு சமமானது என்று வர்ணிக்கப்படுகிறது. விஜய்யின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களுக்கு கூடும் லட்சக்கணக்கான இளைஞர் கூட்டம் வாக்கு சீட்டாக மாறுமா என்பது சந்தேகமே என்று விரக்தியில் இருக்கும் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும், இந்த விமர்சனங்கள் அனைத்தும் விஜய்க்கு ஒரு சவாலாகவே பார்க்கப்படுகின்றன. இத்தனை முட்டுக்கட்டைகளையும், மக்களின் விரக்தியையும் மீறி அவர் ஒரு வெற்றியை பதிவு செய்தால் மட்டுமே அது ஒரு வரலாற்று சாதனையாக அமையும். ஊழலையும், பண பலத்தையும் வீழ்த்தி ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை விஜய்யால் உருவாக்க முடியுமா அல்லது அவரும் மற்றவர்களை போலவே காலப்போக்கில் காணாமல் போய்விடுவாரா என்பது 2026 தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும். அதுவரை சமூக வலைதள போர்க்களத்தில் இத்தகைய நம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும் சரிபாதியாகவே பயணிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
