தமிழகத்தை பொறுத்தவரை, தமிழ்-ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், மூன்றாவது மொழியாக ஹிந்தி உள்பட எந்த மொழியையும் எதிர்ப்போம் என்றும் அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில், மற்ற மாநிலங்கள் தங்கள் தாய்மொழியை விட மற்ற மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் வழிகாட்டல் காரணமாக பிற மாநிலங்களும் தங்களுடைய சொந்த தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அனைத்து அரசு பள்ளிகளிலும், தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தாய்மொழி தெலுங்கு கட்டாயம் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்திலும், ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பஞ்சாபி மொழி பாடத்தை கட்டாயம் ஆக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த சட்டம் 2008ஆம் ஆண்டிலிருந்து இருந்தாலும், எந்த பள்ளிகளும் அதை முறையாக பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, அனைத்து பள்ளிகளும் பஞ்சாபி மொழி பாடத்தை கட்டாயமாக மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், பஞ்சாபி மொழியில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாப் முதல்வர் கூறியுள்ளார்.
தமிழகம் போட்ட விதை காரணமாக, மற்ற மாநிலங்களும் தங்கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், ஹிந்தி மொழிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.