அடையாறில் அரசு பஸ் எரிந்த சம்பவம்.. என்ன நடந்தது? தமிழக அரசு விளக்கம்..!

By Bala Siva

Published:

சென்னை அடையாறு பகுதியில் அரசு பேருந்து எரிந்து சாம்பலான விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்தது.

சென்னை பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் சிறுசேரி என்ற பகுதிக்கு இன்று காலை அரசு ஏசி பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்த நிலையில் அடையாறு அருகில் அந்த பேருந்து சென்றபோது திடீரென புகை வந்தது. இதனையடுத்து உடனடியாக சுதாரித்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பயணிகளை இறக்கி விட்டு உயிர் சேதத்தை தவிர்த்தனர்.

அனைத்து பயணிகளும் இறங்கிய சில நிமிடங்களில் அரசு பேருந்து எரிய தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் இது குறித்த புகைப்படம் வீடியோ இணையதளங்களில் வெளியாகிய நிலையில் தமிழக அரசு இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

TN-01AN-1569 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தை, இன்று மதியம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் தடம் எண் 102, பிராட்வே-லிருந்து 10 பயணிகளுடன் சிறுசேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதியம் சுமார் 2 மணி அளவில் அடையார் பணிமனை அருகில் பேருந்து செல்லும் போது ஓட்டுநர், என்ஜின் அருகே புகை வருவதை கவனித்ததால், உடனடியாக பேருந்தை நிறுத்தி, பயணிகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இறக்கிவிட்டார்.

பின் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உதவியுடன் தீ முழுவதும் அணைக்கப்பட்டு அருகிலிருந்த அடையாறு பணிமனைக்கு பேருந்து பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு,

பேருந்திலிருந்த பயணிகளுக்கும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் துரித நடவடிக்கை மேற்கொண்டார்கள். மேலும் இந்த பேருந்து இந்த ஆண்டின் ஜூன் மாதம்தான் டீசல் வகை எரிபொருளில் இருந்து CNG மாற்றம் பெற்றது. இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.