அடுக்கடுக்காக நிபந்தனைகளை விதித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. தனுஷ் உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட சிக்கல்

By John A

Published:

சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களும் கலந்து கொண்டன. இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன் விபரம் பின்வருமாறு : முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும். நடிகர்கள் பலர் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட காலத்தில் நடித்துக் கொடுக்காமல் இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அட்வான்ஸ் பெற்று அந்தப் படங்களில் நடித்துக் கொடுத்தபின் அடுத்த படங்களில் நடிக்க வேண்டும்.

ரேஷன் கார்டு + சிலிண்டர்+ மின் கட்டணம்+ தமிழ் புதல்வன் திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் மாறப்போகும் விஷயங்கள்

நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றிருப்பதால் இனி அவரை வைத்து புதிய படங்களைத் துவங்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட உள்ளதால் வருகிற 16.08.2024 முதல் புதிய திரைப்படங்களைத் துவங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

தற்போது படப்பிடிப்பில் உள்ள படங்களின் விபரங்களை தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாகக் கடிதம் மூலம் தெரிவித்து அக்டோபர் 30 -க்குள் அனைத்து படப்பிடிப்புகளையும் நிறைவு செய்ய வேண்டும் என ஏகமனதாக பேசி முடிவெடுக்கப்பட்டது.

நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளங்கள் அனைத்தும் உயர்ந்து விட்டதால் அதனை முறைப்படுத்தி மறுசீரமைப்புச் செய்ய உள்ளதால் வருகிற 1.11.2024 முதல் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தமான வேலைகள் அனைத்தும் தற்காலிமாக நிறுத்துவது எனவும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

இனி வரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமான பிரச்சினைகளை பேசிக் களைவதற்கு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட கூட்டுக்குழு (Joint Action committee) அமைக்கப்பட்டுள்ளது.