சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கின்ற நிலையில், இன்று அதிகாலை வெளிநாட்டில் மற்றும் வெளிமாநிலங்களில் படம் பார்த்தவர்களின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக தற்போது பார்ப்போம்.
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பிரம்மாண்டமான ‘கங்குவா’ திரைப்படம் இன்று தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி என்று வெளியாகிறது. ஆனால், வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலங்களில், இந்திய நேரப்படி காலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியாகி, விமர்சனங்களும் வெளியாகி தொடங்கிவிட்டன.
இந்த படம் பார்த்தவர்களின் விமர்சனங்களில், சூர்யா மிகச் சிறப்பாக நடித்திருப்பதாகவும், வரலாற்று கேரக்டர் மற்றும் தற்போதைய கேரக்டர் ஆகிய இரண்டையும் வித்தியாசப்படுத்தி இருப்பதில் மிக அருமை உள்ளது என்றும் கூறப்படுகிறது. சூர்யாவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. படத்தின் கதையை பொருத்தவரை, வரலாற்று காட்சிகள் மிகவும் அருமை என்றாலும், சூர்யா கேரக்டர் தவிர மற்ற கேரக்டர்கள் வலிமையாக உருவாக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேக்கப், கலை இயக்கம், சண்டை காட்சிகள் ஆகியவை மிகவும் அருமை என்றாலும், பின்னணி இசை மிகவும் சத்தமாக இருப்பதால் காது ஜவ்வு கிழியும் வகையில் உள்ளது என்று குறை கூறப்படுகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் டெக்னிக்கல் காட்சிகள் மிக அருமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பணத்தை தண்ணீர் போல் செலவு செய்து, சமரசம் இல்லாமல் ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக வரலாற்று காட்சிகளில் மிகவும் சிறப்பாக கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாக விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன. வித்தியாசமான கதையாக இருந்தாலும், திரைக்கதையின் அமைப்பில் சில குறைகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.