இந்திய அணியில் புதிதாக வரும் இளம் வீரர்கள் எப்படிப்பட்ட சவாலான சூழலாக இருந்தாலும் அதனை அனுபவம் வாய்ந்த வீரர்களை போல எதிர்கொண்டு செயல்படுகின்றனர். அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், ரியன் பராக், ருத்துராஜ், ஜெய்ஸ்வால் என ஏராளமான இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடிவரும் சூழலில் வெளிநாட்டு மண்ணிலும் அவர்கள் அசத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அப்படி ஒரு சூழலில் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர் திலக் வர்மா இந்திய அணியிலும் மிகப்பெரிய தாக்கத்தை தனது பேட்டிங் மூலம் ஏற்படுத்தி வருகிறார். அதிலும் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது டி20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்திருந்த திலக் வர்மா, இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்திருந்தார். தொடர்ச்சியாக பல சிறந்த இன்னிங்ஸ்களை டி20 போட்டிகளில் வெளிப்படுத்தி வரும் திலக் வர்மா இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.
ரெய்னா – திலக்.. வியக்க வைத்த ஒற்றுமை
அப்படி ஒரு சூழலில் தான் டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மாவுக்கும் அவரை போலவே ஒரு காலத்தில் இடது கை பேட்ஸ்மேனாக இருந்த சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் பயணத்திற்கும் இடையே இருந்த பல வியப்பான ஒற்றுமைகள் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இடது கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் நவம்பர் மாதம் பிறந்தவர்கள்.
இதேபோல இரண்டு பேருமே வலதுகை ஆஃப் பிரேக் பந்து வீச்சாளர்களாக இருக்கும் நிலையில் தங்களது முதல் ஐபிஎல் அரைச் சதத்தை தங்களின் இரண்டாவது போட்டியில் அடித்திருந்தனர். மேலும் ரெய்னா மற்றும் திலக் ஆகிய இருவரும் தங்களின் முதல் ஐபிஎல் தொடரில் 350 ரன்கள் அடித்து 10 கேட்ச்களையும் எடுத்திருந்தனர். இதே போல தங்களின் இருபதாவது வயதில் இருவரும் டி20 போட்டிகளில் அறிமுகமாக தங்களின் முதல் போட்டியில் இரண்டு கேட்ச்களை எடுத்திருந்தனர்.
அதேபோல ரெய்னா மற்றும் திலக் வர்மாவின் கிரிக்கெட் பயணத்தில் அவர்கள் டி20 சர்வதேச போட்டியில் அடித்த முதல் அரைச்சதத்தின் போது இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இவற்றைத் தாண்டி மற்றொரு வியப்பான சம்பவமாக இந்த இரண்டு போட்டிகளிலும் எதிரணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. மேலும் டி20 சர்வதேச போட்டியில் இவர்கள் இரண்டு பேரின் முதல் விக்கெட் அவர்கள் வீசிய முதல் ஓவரிலேயே கிடைத்திருந்தது.
அது மட்டுமில்லாமல் இரண்டு பேருமே எதிரணி விக்கெட்டை எல்பிடபுள்யூ முறையில் எடுக்க அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது மற்றொரு சிறப்பம்சம். இவை அனைத்தையும் தாண்டி ரெய்னா மற்றும் திலக் வர்மா ஆகிய இரண்டு பேருமே தங்களின் முதல் டி20 சர்வதேச சதத்தை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்றாவது வீரராக களம் இறங்கி அடித்திருந்தது தான்.
இப்படி வெவ்வேறு காலகட்டத்தில் ஆடிய இரண்டு இடது கை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை ரசிகர்களை ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.