சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சுஹாசினி நடித்த படம் எது என்று கேட்டால் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ‘தர்மத்தின் தலைவன்’ என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் ரஜினிக்கு தங்கையாக சுஹாசினி ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அது என்ன படம் என்பதை பற்றி தற்போது காணலாம்.
தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் “தாய் வீடு”. இந்த படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் மசாலா வகையில் உருவாகி இருக்கும். பணக்காரர் மேஜர் சுந்தர்ராஜனிடம் இரண்டு தங்க வாள் இருக்கும். அதில் ஒன்று மியூசியத்திலும் இன்னொன்று அவருடைய வீட்டிலும் இருக்கும். அந்த இரண்டு வாளையும் ஒன்று சேர்த்தால் புதையல் ஒன்று கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கும்
இந்த நிலையில் மேஜர் சுந்தர்ராஜனிடம் இருக்கும் வாளினை திருட தேங்காய் சீனிவாசன் முயலும் போது தெரியாமல் அவருடைய குழந்தையையும் காரில் வைத்து கடத்திவிடுவார். ஆனால் அந்த காரை கார் திருடன் நம்பியார் திருடி விடுவார். இதனால் அந்த குழந்தை நம்பியாரிடம் வளரும். அந்த குழந்தை தான் மேஜரின் மகன் ரஜினி.
மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பண்டரிபாய் தம்பதியினர் தங்கள் குழந்தையை காணாமல் வருட கணக்கில் ஏக்கத்துடன் இருப்பார்கள். இவர்களின் மகள் தான் சுஹாசினி
இந்த நிலையில் கார் திருடனாக வளரும் ரஜினிகாந்த் தற்செயலாக மேஜர் சுந்தரராஜன் வீட்டில் திருட வரும்போது அவர்கள் தரும் பாசத்தை பார்த்து மனம் உருகி விடுவார். ஒரு கட்டத்தில் மேஜர் சுந்தரராஜன் தான் தனது தந்தை என்றும், பண்டரிபாய் தாய் என்றும், சுஹாசினி சகோதரி என்றும் தெரிந்த பின்னர் தனது எதிரிகளை துவம்சம் செய்ய புறப்படுவது தான் இந்த படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் ரஜினிகாந்த் சகோதரியாக சுஹாசினியும், ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை அனிதா ராஜூம் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் வில்லன்களாக விஜயகுமார், எம் என் நம்பியார், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருப்பார்கள். ஜெய்சங்கர் காவல்துறை அதிகாரியாகவும, சில்க் ஸ்மிதா ஒரு பாடலுக்கு நடனம் மற்றும் கவர்ச்சி கேரக்டரிலும் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தை ஆர். தியாகராஜன் இயக்கி இருப்பார் என்பதும் சங்கர் கணேஷ் இசையில் இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் ’ஆசை நெஞ்சே’ என்ற ஜானகி பாடிய பாடல் இன்று கேட்டாலும் இனிமையாக இருக்கும். ’அழகிய கொடியே ஆடடி’ என்ற பாடல் இளசுகளுக்கு சரியான விருந்தாக இருக்கும்.
லாஜிக் என்ற பேச்சுக்கு இடமே இல்லை என்று அன்றைய நாளில் பத்திரிகைகள் இந்த படத்தை விமர்சனம் செய்தன. இருப்பினும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் செய்திருந்தது. இந்த படத்தின் நாயகி அனிதா ராஜ் நடித்த ஒரே தமிழ் படம் இதுதான். அதே போல, ரஜினிக்கு தங்கையாக சுஹாசினி நடித்த ஒரே படமும் இதுதான்.
மொத்தத்தில் ரஜினியின் வெற்றி பெற்ற படங்கள் பட்டியலில் ‘தாய் வீடு’ இருந்தது. மேலும் இந்த படம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு என்பதால் நாய், குதிரை போன்ற விலங்குகளும் இதில் நடித்திருந்தன.