ஒவ்வொரு வருடமும் சென்னை தான் அதிகமாக பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்படும். ஆனால் மற்ற மாவட்டங்கள் சராசரி மழையைப் பெற்றாலும் ஊரையே சூழ்ந்து வெள்ளம் வரும் அளவிற்கு பெய்வது அரிதினும் அரிதான ஒன்று. ஆனால் 2023-ல் இக்காட்சி தமிழகத்தில் அரங்கேறியது. வழக்கம் போல் மாண்டஸ் புயலால் சென்னை பாதிக்கப்பட அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு ஆபத்து காத்திருந்தது. ஒரே நாளில் மிதமிஞ்சிப் பெய்த பருவமழையால் மூன்று மாவட்டங்களுக்கும் தொடர்பே இல்லாமல் போகும் அளவிற்கு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை தாமிரபரணி வெள்ளம் புரட்டிப் போட்டது.
சென்னையைக் காட்டிலும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. அனைத்து போக்குவரத்தும சில நாட்களுக்குத் துண்டிக்கப்பட்டு இந்த மூன்று மாவட்டங்களுமே தனித் தீவானது. டிசம்பர் 17 அன்று பெய்த இம்மழை நெல்லை இதுவரை காணாத வரலாறு. இந்நிலையில் தான் வழக்கம் போல் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் வழக்கம் போல் வந்து விட்டன. ஆனால் மறுபடியும் மீண்டும் சென்னை கிளம்பும் போதுதான் அந்த ஆபத்து காத்திருந்தது. அனைத்து ரயில் நிலையங்களையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
மேலும் திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்பிரஸ் ரயிலானது வழக்கம் போல் சிறிது மழை குறைந்ததும் புறப்பட அடுத்த ரயில் நிலையமான ஸ்ரீ வைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. மீட்புப் படையினர் ரயில்வே தண்டவாளங்களைப் பரிசோதிக்க தண்டவாளம் அந்தரத்தில் தொங்குவதைப் பார்த்து அதிர்ந்தனர். தண்டவளத்திற்குக் கீழ் உள்ள மண்மேடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு உடனடியாக எச்சரிக்கைத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பணியில் இருந்தவர் ஜாபர் அலி என்ற ஸ்டேஷன் மாஸ்டர். அடுத்த சில நொடிகளில் 800 பயணிகளுடன் ரயில் புறப்படத் தயாராக இருந்த போது லோகோ பைலட்டிடம் நீரால் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டிருப்பதைக் கூறி ரயிலை நிறுத்தினார்.
டெக்ஸ்ட் – வீடியோ.. யூடியூபர்களுக்கு வரப்பிரசாதம் தரும் புதிய நிறுவனம்..!
பயணிகள் இன்னும் ரயில் புறப்படவில்லையே என்று ஒவ்வொருவராக வெளியில் வந்து பார்க்க நேரம் கடந்தது. இரவு செல்லச் செல்ல பயணிகள் பொறுமை காக்க முடியாமல் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலியிடம் கேட்க, அவரும் வெள்ளம் குறித்த தகவல்களைக் கூறியிருக்கிறார். இப்படியே இரவுப்பொழுது முழுவதும் ரயிலில் கழிந்தது. மறுநாள் காலை கண் விழித்தவர்களுக்கு ரயிலைச் சுற்றி வெள்ளம் இருந்த போது தாங்கள் காப்பாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
பின்னர் அருகிலிருந்த கிராம மக்கள் ரயிலில் இருந்த பயணிகள் அனைவருக்கும் உணவு சமைத்துக் கொடுத்து மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினர். இப்படி தக்க சமயத்தில் ரயிலை நிறுத்தி சுமார் 800 பயணிகளைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலியின் பணியைப் போற்றும் வகையில் ரயில்வேதுறை அவருக்கு உயரிய விருதான அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் என்ற விருதினை வழங்க உள்ளது.
மாணவர்களுக்கு 6 விதங்களில் கடன் வழங்கும் எஸ்பிஐ வங்கி.. முழு விவரங்கள்..!
ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே வார விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே துறையினருக்கு இவ்விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான இந்த உயரிய விருதினை ஜாபர் அலி பெற உள்ளார். வருகிற 21-ம் தேதி ரயில்வே அமைச்சர் அஸ்வினி யாதவ் இவ்விருதின வழங்கி கௌரவிக்கிறார்.