ராமநாதபுரம்: இலங்கை கல்பட்டி கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வழியாக படகில் தங்கம் கடத்த முயன்றவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அந்த படகில் 11.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலை, மருந்து பொருட்கள், மஞ்சள், ஏலக்காய், கஞ்சா, கடல் அட்டை, போதைப்பொருட்கள், வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்டவை கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகின்றன. இதேபோல் இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு தங்கக்கட்டிகள் கடத்தி வருவதும் அவ்வப்போது நடக்கின்றன.இந்தநிலையில் இலங்கை கல்பட்டி கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் 2 ரோந்து கப்பல்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, இலங்கை பதிவு எண் கொண்ட பிளாஸ்டிக் படகு ஒன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்று கொண்டு இருந்தது. உடனே இலங்கை கடற்படையினர் அந்த படகை மடக்கி சோதனை செய்தனர். அந்த பிளாஸ்டிக் படகில், அதிக அளவில் தங்கக்கட்டிகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கக்கட்டிகளையும், படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், பிளாஸ்டிக் படகில் இருந்த 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் இந்த தங்கக்கட்டிகளை இலங்கை கல்பட்டி பகுதியில் இருந்து ராமேசுவரம், தனுஷ்கோடி வழியாக தமிழகத்துக்கு கடத்திவர முயன்றது தெரியவந்தது. கைதான 3 பேரிடமும் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தம் 11½ கிலோ தங்கக்கட்டிகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தங்கக்கட்டிகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்.