Soundariya about Muthukumaran : பிக் பாஸ் நிகழ்ச்சி என வந்து விட்டால் 80 முதல் 85 நாட்களை கடக்கும் சமயத்தில் எலிமினேட்டாக போவது யார் என்பதை பற்றி அதிகம் பேசாமல் டைட்டில் வின்னராக மாறப்போவது யார் என்ற ஒரு பேச்சு பார்வையாளர்கள் மத்தியில் இல்லாமல் வீட்டிற்குள்ளேயும் ஆரம்பித்து விடும். இதற்கிடையே, அடுத்தடுத்து நிறைய போட்டியாளர்கள் எதிர்பாராத நேரத்தில் எலிமினேட் ஆகிக் கொண்டிருக்க, நடுவே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற்று ரயானும் முதல் ஆளாக ஃபைனலுக்கு முன்னேறியுள்ளார்.
அவருடன் இறுதி சுற்றுக்கு யாரெல்லாம் முன்னேறுவார்கள் என்பது பற்றியும் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள் பெயர்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்டோர் ரயானுடன் ஃபைனலில் முன்னேறுவார்கள் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.
டைட்டில் வின்னர் யார்?
ஆனால் அருண் பிரசாத், விஜே விஷால், பவித்ரா உள்ளிட்ட போட்டியாளர்களும் இருப்பதால் இனி வரும் நாட்கள் சூடுபிடிக்கும் என்றே தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களான அர்னவ், ஃபேட்மேன் ரவீந்தர், தர்ஷா குப்தா, சாச்சனா உள்ளிட்ட பலரும் பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது நுழைந்துள்ளனர். ஒவ்வொருவரும் உள்ளே இருப்பவர்கள் பற்றி வெளியே இருக்கும் விமர்சனங்களை பற்றியும் ஆதரவுகளை பற்றியும் நிறைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அர்னவோ சில போட்டியாளர்களை மிக மோசமாக சித்தரித்தும் அவர் பேச நினைத்த வார்த்தைகள் சக போட்டியாளர்களிடம் அதிக வெறுப்பையும் சம்பாதித்திருந்தது. இப்படியாக பழைய போட்டியாளர்கள் மீண்டும் நுழைந்தது ஒரு பக்கம் உற்சாகத்தையும் இன்னொரு பக்கம் சில மோதல்களுக்கும் காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்து ஜெயிச்சா சந்தோசம்
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் முத்துக்குமரன் குறித்து பவித்ராவிடம் சௌந்தர்யா பேசும் சில விஷயங்கள் அதிக கவனம் பெற்று வருகிறது. பலரும் இந்த சீசனின் வின்னராக போவது முத்துக்குமரன் என குறிப்பிட்டு வரும் சூழலில் அவரைப் பற்றி பேசும் சௌந்தர்யா, “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் முத்து இந்த சீசனின் டைட்டில் வின்னராக மாறினால் எனக்கு மிகவும் சந்தோஷம் தான்.
நான் அதை நினைத்து மிகவும் பெருமைப்படுவேன். ஏனென்றால் ஒரு போட்டியாளராக நிறைய மரியாதையை அவராக விளையாடி பெற்றுள்ளார். நானும் முத்துக்குமரனை அதிகம் மதிக்கிறேன். நான் எப்போதும் சொல்வது போல கேம் என வரும்போது மற்றவர்களின் தன்னம்பிக்கையை உடைத்து மேலே வருவதும், மற்றவர்கள் செய்யும் குற்றத்தை வெளிப்படுத்தி தனது குற்றத்தை மறைப்பதும் தான் முத்துக்குமரனிடம் எனக்கு பிடிக்காத விஷயம்.
போட்டிகள் வரும் போது முத்துக்குமரன் விளையாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவர் இந்த சீசனில் ஜெயித்தால் நான் மிக அதிகமாக சந்தோஷப்படுவேன். அதே போல முத்துக்குமரன் பேசும் விஷயங்கள் தெளிவில்லாமல் போவதும் என் மண்டையில் ஒரு ஓரமாக உள்ளது” என சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.