ஆன்லைன் டெலிவரி செய்யும் இ காமர்ஸ் நிறுவனங்கள் போட்டியின் காரணமாக தற்போது விரைவாக ஆர்டர்களை டெலிவரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களை அரைமணி நேரத்தில் டெலிவரி செய்யும் முயற்சியை அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் சில குறிப்பிட்ட இடங்களில் செயல்படுத்தி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், தற்போது ஆடைகளை ஆர்டர் செய்தால், அரைமணி நேரத்தில் டெலிவரி செய்யும் முறையை பெங்களூர் நகரில் Myntra நிறுவனம் அறிமுகம் செய்து, ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே Myntra நிறுவனம் விரைவான டெலிவரி சேவைகளில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. அதேபோல், Myntra எக்ஸ்பிரஸ் என்ற சேவையின் கீழ், 24 முதல் 48 மணி நேரத்தில் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் டெலிவரி செய்து வருகிறது.
தற்போது, “M-Now” என்ற புதிய சேவையின் அடிப்படையில், சட்டை, பேண்ட், சேலை, வேஷ்டி உள்ளிட்ட எந்தவிதமான ஆடைகளாக இருந்தாலும், அரைமணி நேரத்தில் டெலிவரி செய்யும் முயற்சியில் Myntra நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது பெங்களூரில் உள்ள ஒரு சில பின்கோடு எண்கள் உள்ள பகுதிகளுக்கு மட்டும் தற்போது சோதனை முயற்சியாக செயல்படுகிறது. விரைவில் இந்த சேவை அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் என்றும் Myntra நிறுவனம் தெரிவித்துள்ளது.