சென்னை: senior citizens train concession : ரயில்களில் கட்டண சலுகை கிடைக்காமல் 4 ஆண்டுகளாக மூத்த குடிமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மீண்டும் சலுவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கைக்கு ரயில்வே அமைச்சகம் செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கும்..
ரயில் பயணத்தில் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதம் கட்டண சலுகையும் கடந்த 2009-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது. இந்த சலுகை, மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.
ஆனால் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை படிப்படியாக தொடங்கியபோது, ரயில்வேயில் செலவைக்கட்டுப்படுத்தும் நோக்கில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது.
ரயிலில் கட்டண சலுகை ரத்தால், 2020-ம் ஆண்டு முதல் பயணத்தை மூத்த குடிமக்கள் படிப்படியாக தவிர்க்க தொடங்கி விட்டார்கள். ஆன்மிக தளங்களுக்கு செல்லவும், மருத்துவ சிகிச்சைக்கு சென்று வரவும் மூத்த குடிமக்களுக்கு இந்த ரயில் கட்டண சலுகை பேருதவியாக இருந்து வந்ததால், இதை மீண்டும் வழங்க வேண்டும் என்று முதியவர்கள் பலர் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், இதற்கு ரயில்வே அமைச்சகம் செவிசாய்க்கவில்லை.. இந்த கட்டண சலுகையால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும், கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது
இதற்கிடையில், கொரோனா பாதிப்புக்கு பிறகு, விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கப்பட்ட குறுகிய தூர பயணிகள் ரயில்களை மீண்டும் சாதாரண கட்டணத்தில் இயக்க தெற்கு ரயில்வே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் உத்தரவிட்டது. இதேபோல, கொரோனா காலத்துக்கு பிறகு, ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ரயில் பயணிகள், மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தினர் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு தற்போது 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இனியும் தாமதிக்காமல் விரைவாக ரயில் பயண கட்டண சலுகையை மூத்த குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும் .