ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது பிரம்மாண்ட பொதுக்கூட்டம், தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை எழுதியுள்ளது. சுமார் 31 நிமிடங்கள் விஜய் ஆற்றிய அந்த அனல் பறக்கும் உரை, வெறும் அரசியல் மேடை பேச்சு மட்டுமல்ல; அது திராவிட கோட்டைகளின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்கும் ஒரு போர் முழக்கமாக மாறியுள்ளது. விக்ரவாண்டி மாநாட்டில் தென்பட்ட சில தடுமாற்றங்களை சரிசெய்து, ஈரோட்டில் ஒரு முழுநேர அரசியல் தலைவராக விஜய் விஸ்வரூபம் எடுத்துள்ளார். குறிப்பாக, “தீய சக்தி திமுக” என்ற முழக்கத்தை அவர் கையில் எடுத்த விதம், தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்திற்கான விதையை தூவியுள்ளது.
இந்தக் கூட்டத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுபவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். “கொங்கு மண்டல தளபதி” என தன்னை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். சுமார் 35,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் எவ்வித பாதுகாப்பு குளறுபடிகளுமின்றி, ஒரு ஒழுங்குமுறைக்குள் திரண்டிருந்தது அரசியல் பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது. செங்கோட்டையனின் நீண்டகால அரசியல் அனுபவமும், நிர்வாக திறமையும் தவெகவின் கைகொடுத்திருப்பது அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. அதிமுகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தவெக-வை நோக்கி நகர்வார்களோ என்ற அச்சம் தற்போது அதிமுக வட்டாரத்தில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தனது உரையின்போது, “இன்னும் பலர் நம்முடன் இணைய போகிறார்கள்” என்று அழுத்தம் திருத்தமாக பேசியது அதிமுக கூடாரம் காலி ஆகபோவதற்கான ஒரு முன்னறிவிப்பாகவே கருதப்படுகிறது. அதிமுகவை நேரடியாக தாக்காமல், திமுகவை மட்டும் பிரதான எதிரியாக விஜய் முன்னிறுத்தியிருப்பது, அதிமுகவின் வாக்கு வங்கியை தன்பக்கம் இழுக்கும் ஒரு தந்திரமான நகர்வாகும். அதிமுக களத்திலேயே இல்லை என்று அவர் மறைமுகமாக குறிப்பிட்டதன் மூலம், அக்கட்சியின் தொண்டர்களை தவெக-விற்கு தாரை வார்க்கும் நிலையை அவர் உருவாக்கியுள்ளார். இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
ஈரோட்டில் விஜய் கொடுத்த அந்த “பேயடி” திராவிட கட்சிகளை திக்கு தெரியாமல் திணற வைத்துள்ளது. வாரிசு அரசியல், குடும்ப ஆட்சி மற்றும் நிர்வாக சீர்கேடுகளை அவர் கடுமையாக சாடிய விதம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, ஊழல் அற்ற, சாதி மத சார்பற்ற அரசியல் என்ற விஜய்யின் நிலைப்பாடு, பாரம்பரிய அரசியல் கட்சிகளின் பிடியில் இருந்து விடுபட நினைக்கும் மக்களுக்கு ஒரு மாற்று பாதையாக தெரிகிறது. இதுவரை யார் அடுத்த மாற்று? என்ற கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருந்த தமிழக மக்களுக்கு, விஜய் ஒரு நம்பிக்கையூட்டும் தலைவராக தங்களை அடையாளம் காட்டியுள்ளார்.
சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் அடுத்த சில நிமிடங்களிலேயே விஜய்யின் பேச்சு காட்டுத்தீயாய் பரவியது. ஒரு திரைப்படத்தின் மாஸ் காட்சியை விட அதிக வீச்சுடன் அவரது அரசியல் உரையின் துணுக்குகள் பகிரப்பட்டு வருகின்றன. விஜய்யை ஒரு நடிகராக மட்டுமே பார்த்தவர்கள் கூட, அவரது அரசியல் முதிர்ச்சியையும், கள எதார்த்தத்தை பேசும் பாணியையும் ரசிக்க தொடங்கியுள்ளனர். திராவிட கட்சிகளின் ஐடி விங்குகள் எவ்வளவு முயற்சி செய்தாலும், விஜய்யின் இந்த புதிய அரசியல் அலைகளை தடுத்து நிறுத்த முடியாமல் தடுமாறி வருகின்றன.
முடிவாக, ஈரோடு பொதுக்கூட்டம் என்பது 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு வலுவான அடித்தளமாகும். ஒருபுறம் திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்தும், மறுபுறம் அதிமுகவின் நிலையின்மையை சுட்டிக்காட்டியும் விஜய் ஆடிய இந்த ஆட்டம் தமிழக அரசியலில் ஒரு புதிய துருவத்தை உருவாக்கியுள்ளது. மொத்தத்தில் விஜய்யின் இந்த தீவிரமான அரசியல் பயணம், திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டுக் கால ஆதிக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
